கர்நாடக மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவுப் பொருட்களை தூக்கி வீசி வழங்கிய அம்மாநில அமைச்சரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதுபோல், கர்நாடக மாநிலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தங்க இடமின்றி தவித்த மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளும் கேரளவிற்கு நிதி உதவி வழங்கி வரும் நிலையில், முகம் சுழிக்கும் வகையில் கர்நாடக அமைச்சரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவு வழங்குவதற்காக கர்நாடகா அமைச்சரும், முதல்வர் குமாரசாமியின் அண்ணனுமான எச்.டி.ரேவண்ணா முகாமுக்கு வந்திருந்தார். அங்கு, பசியால் வாடி வந்த குழந்தைகள் முதல் பெரியவர்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை வீசி உள்ளார்.
இதனை, வீடியோ எடுத்த வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.