அமெரிக்க விசா கெடுபிடியால் செலவு கூடும் - இன்போசிஸ் எச்சரிக்கை

by SAM ASIR, Jul 24, 2018, 23:03 PM IST
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அதிகரித்திருப்பது வேலைகளை தாமதப்படுத்துவதுடன், செலவுகளை அதிகரிக்கும் என்று இன்போசிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. 
டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைகள் (projects) விரைந்து முடிக்கப்பட வேண்டுமென, வாடிக்கையாளரின் இடத்திலேயே அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை அமர்த்தியுள்ளன.
 
இந்நிலையில் பணியாளர் விசா மற்றும் குடிபெயர்தல் விதிமுறைகள் மாற்றம் ஆகியவை, வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறைகள் கடுமைப்படுத்தப்படுவதால், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு செலவு கூடுவதுடன், அவர்களது லாபமும் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
 
"சமீப காலங்களில் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது அதிகமாகியுள்ளது. இது எங்கள் திட்டப்பணிகளுக்கு (projects)பணியாளர்களை அனுப்புவது மற்றும் உரிய நேரத்திற்கு விசா பெறுவது ஆகியவற்றை பாதிக்கிறது. திட்டப் பணிகளை முடிப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், செலவு அதிகரிக்கிறது. விசாவுக்காக அதிக நாட்கள் முன்னரே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால், அந்த நடைமுறையும் செலவு பிடித்ததாக மாறியுள்ளது.
 
அமெரிக்க ஹெச்-1 பி விசா வழங்கும் நடைமுறை மற்றும் விசா நீட்டிப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது நபர் நிறுவனத்தில் (third party) பணிபுரிய தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்புவது, இளநிலை தகவல் தொழில்நுட்ப பணியாளரை அமெரிக்காவுக்கு அனுப்புவது ஆகியவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன" என்று இன்போசிஸ் (Infosys) நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை (regulatory filing) பதிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையிலும் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 3,612 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

You'r reading அமெரிக்க விசா கெடுபிடியால் செலவு கூடும் - இன்போசிஸ் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை