40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள்.
சசிகலா சிறைக்குச் சென்ற நாளில் இருந்து பொதுக்கூட்ட மேடைகளுக்கான செலவுகளை, கட்சிக்காரர்கள்தான் செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நடந்த சுற்றுப்பயணங்களில் கட்சிப் பொறுப்பாளர்களே கைக்காசைப் போட்டு செலவு செய்தனர்.
தினகரன் அணிக்குள் வருவது குறித்து எந்தவொரு மாநிலக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழல் வந்தால், கடனாளியாகிவிட நேரிடும் என அவருடைய கட்சிக்காரர்கள் பயப்படுகிறார்கள்.
ஆனால் தினகரனோ, எதற்கும் நாம் பயப்பட வேண்டியதில்லை. அதிமுக, திமுகவில் வலுவான தலைவர்கள் இல்லை. முன்பெல்லாம் இந்த அணி, அந்த அணி என இரண்டு அணிகள்தான் இருக்கும். இப்போது சிறிய கட்சிகளுக்கு 2,3 கதவுகள் திறந்திருக்கின்றன.
தொகுதிப் பங்கீட்டில் அவர்களே அடித்துக் கொள்வார்கள். நம்முடைய தலைமையில் வலுவான அணி அமையும். பல தொகுதிகளில் நாம் உறுதியாக வெற்றி பெறுவோம்.
தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு காட்சிகள் மாறும் என நம்பிக்கையோடு பேசி வருகிறார்.
அருள் திலீபன்.