டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அமித் மிஸ்ரா நீக்கப்பட்டு அவேஷ் கான் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாம் குர்ரான் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் ஆண்ட்ரூ டைக்கு பதிலாக முஜிபுகீர் ரஹ்மான் இடம்பிடித்தார்.
கெய்ல் இல்லை என்பதால் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை ஓப்பனிங் வீரர்கள் பூர்த்தி செய்யவில்லை. கேஎல் ராகுலுடன் சாம் குர்ரான் ஓப்பனிங் வீரராக களம்புகுந்தார். முதல் ஓவரை அதிரடியுடன் துவக்கிய கேஎல் ராகுல் 11 ரன்களுடன் 2வது ஓவரிலேயே வெளியேற, 20 ரன்களில் நான்காவது ஓவரிலேயே சாம் குர்ரான் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மாயங் அகர்வால் கைகொடுக்க தவறினாலும், சர்ப்ராஸ் கான் - டேவிட் மில்லர் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 39 ரன்களில் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, அவரை தொடர்ந்து மில்லரும் பன்ட்டிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பின் வந்த மற்ற வீரர்கள் சொதப்ப, கடைசி நேரத்தில் மன்தீப் சிங் அதிரடி காட்டினார். அவரின் அதிரடி உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.