சர்வதேச அளவில் பல நாடுகள் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலும் இது போன்ற டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படலாம் என்று பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகள் தோற்றத்திற்குப் பிறகு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் வரவேற்பு குறைந்து வருகிறது.
இதை சரிகட்ட ஐசிசி மற்றும் பல நாட்டு கிரிக்கெட் அமைப்புகள் பலதரப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தகும் முயற்சிதான் பகல்- இரவு டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகள் கடந்து ஒர் ஆண்டாக பரவலாக நடந்து வருகின்றன.
ஆனால், இந்தியாவில் அதைப் பற்றிய பேச்சே இல்லை. இந்நிலையில், பகல்- இரவு டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் விரைவில் நடத்தப்படலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமான பிசிசிஐ-யின் ஜென்ரல் மேனேஜர் சபா கரீம், `பகல்- இரவு ஆட்டம் விளையாடுவது குறித்து பிசிசிஐ மிகத் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஏன் அப்படியொரு விஷயத்தை செயல்படுத்திப் பார்க்கக் கூடாதென்று எங்களுக்குள் கேள்வி எழுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டை அழிவதிலிருந்து காப்பாற்ற ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானது பகல்- இரவு டெஸ்ட் போட்டி. அது குறித்து சீக்கிரமே பிசிசிஐ முடிவெடுக்கும்’ என்று தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.