ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது கால்பந்து திருவிழா. 32 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகள் விறுவிறுப்பான 16 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
பின்னர் அதிலிருந்து 8 அணிகள் மட்டுமே குவாட்டர் பைனல்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் மோதியது. இரவு 7.30 மணியளவில் ஆட்டம் துவங்கியது.
முழு பலத்துடன் களம் இறங்கியது பிரான்ஸ் அணி, ஆட்டம் துவங்கியது முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. உருகுவே அணியின் டிபென்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கோல் அடிக்க திணறியது பிரான்ஸ் அணி. அதே போல் உருகுவே அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டத்தின் 40 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ் அணியின் கிரிஷ்மான் பந்தை உதைக்க அதனை தலையால் முட்டி கோலாக மாற்றினார் வரானே. அதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. உருகுவே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி நேரத்தில் ஆட்டம் பிரான்ஸ் அணியிடமே இருந்தது. 61வது நிமிடத்தில் கிரிஷ்மான் அடித்த பந்தினை உருகுவே அணியின் கோல் கீப்பர் தடுக்க முயற்சித்த போது அவரின் கை பட்டு தவறுதலாக அதுவே பிரான்ஸ் அணிக்கு ஒரு கோலாக மாறியது. இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது பிரான்ஸ் அணி.
உருகுவே அணியும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 90 நிமிடங்கள் முடிந்தும் உருகுவே அணிக்காக கூடுதல் நேரமும் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் கோல் அடிக்க தவறியது உருகுவே அணி. இதனால் அரையிறுதி வாய்ப்பை சுலபமாக எட்டியது பிரான்ஸ் அணி.