2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான பிபா விருது குரோஷிய அணியின் கேப்டன் லூகா மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது.
பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லும் போட்டியில், ரொனால்டோ மற்றும் முகமது சாலா போன்ற கால்பந்தாட்ட ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி லூகா மோட்ரிச் விருதினை தட்டிச்சென்றுள்ளார்.
ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், குரோஷியா அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வர அந்த அணியின் கேப்டனான லூகா மோட்ரிச்சின் சிறந்த ஆட்டம் பெரிதும் கைகொடுத்தது. இதன் காரணமாகவே இவ்விருதினை சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா மோட்ரிச்சுக்கு வழங்கியுள்ளது.
மேலும், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு தங்க கால்பந்து விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான தேர்தலில், 29 சதவீத வாக்குகள் பெற்று லூகா மோட்ரிச் இவ்விருதினை தனதாக்கினார். ரொனால்டோவுக்கு 19 சதவீத வாக்குகளும், முகமது சாலாவிற்கு 11.2 சதவீத வாக்குகளும், கைலியன் பாப்பேவுக்கு 10 சதவீத வாக்குகளும், மெஸ்சிக்கு 9 சதவீத வாக்குகளும் இந்த தேர்தலில் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து லண்டனில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற விழாவில் லூகா மோட்ரிச்சுக்கு விருது வழங்கப்பட்டது.
விருதினை பெற்ற லூகா மோட்ரிச், ரொனால்டோவுக்கும், சாலாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். மேலும், தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டீம் மற்றும் குடும்பத்தாருக்கும் நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.