மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
ஆஸி அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் எடுத்து இன்னும் 141 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலாவது டெஸ்டில், இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸி.யும் வென்ற நிலையில் 3-வது போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா இந்திய வேகப் பந்து வீரர் பும் ராவின் அபார பந்துவீச்சில் 151 ரன்களில் சுருண்டது.
பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் . முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த இந்தியா, 3-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்த நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 106 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 399 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி.
வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 8 விக் கெட்டுக்கு 215 ரன்கள் என்ற நிலையில் தத்தளித்தது. ஆனால் 9-வது விக்கெட்டுக்கு லி யானுடன் ஜோடி சேர்ந்து ஆடிய கம்மின்ஸ் அதிரடியாக ஆட கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கியும் இந்திய வீரர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதனால் ஆஸி அணி 8 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்த போது 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் ஆஸி.அணி வெற்றிக்கு 141 ரன்கள் தேவை. ஆனால் எஞ்சிய இரு விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என்ற சாதகமான சூழலே உள்ளது என்பதால் இந்தியா வென்று தொடரில் 2-1 என முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.