வெகுவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் குறைபாடுகளும் மலிந்து காணப்படுகின்றன. சமூக ஊடகமான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட குறைபாட்டினை (bug) கண்டறிந்து தெரிவித்த மணிப்பூரை சேர்ந்த இளம் பொறியாளருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 5,000 அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 3 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்) வெகுமதி அறிவித்துள்ளது.
மணிப்பூரை சேர்ந்தவர் சோனெல் சௌகாய்ஜம் (வயது 22). கட்டடவியல் பொறியாளரான இவர், கடந்த மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் குறைபாடு ஒன்றை கண்டறிந்தார். நாம் ஒருவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது அனுமதி இல்லாமல் அந்த அழைப்பை காணொளி என்னும் வீடியோ அழைப்பாக மாற்ற முடியும் என்பதே அக்குறைபாடு. ஒருவரின் அனுமதியில்லாமல் ஆடியோ அழைப்பை வீடியோ அழைப்பாக மாற்றுவது அவரது தனியுரிமையை மீறும் செயலாகும்.
வாட்ஸ்அப் ஆடியோ அழைப்பானது வீடியோ அழைப்பாக மாற்றத்தக்கதாக உள்ளது என்ற குறைபாட்டை கடந்த மார்ச் மாதம் சோனெல், வாட்ஸ் அப் நிறுவனத்திற்குத் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு குழுவினர், வாட்ஸ்அப்பில் இக்குறைபாடு உள்ளது என்பதை உறுதி செய்தனர். பின்னர் தங்கள் நிறுவன தொழில்நுட்ப குழுவினருக்கு இதை தெரியப்படுத்தினர். ஃபேஸ்புக் தொழில்நுட்ப குழுவினர் வாட்ஸ்அப்பிலிருந்து இக்குறைபாட்டினை 15 முதல் 20 நாள்கள் அவகாசத்தில் நிவிர்த்தி செய்தனர்.
சோனெல் சௌகாய்ஜம்மை கௌரவப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்ஜர் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் மேம்பாட்டுக்கு உதவியதற்கான நன்றிக்குரியோர் பட்டியலில் 16 இடத்தில் அவரது பெயரை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது. மேலும் 5,000 அமெரிக்க டாலர்களும் வெகுமதியாக அறிவித்துள்ளது.