உங்க படம் செக்ஸ் கேமில் இருக்கு: அபாய எஸ்எம்எஸ்

by SAM ASIR, Aug 1, 2019, 15:26 PM IST
Share Tweet Whatsapp

பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களின் மொபைல் எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வரும்.

"உங்கள் படம் செக்ஸ் கேம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க" என்று சுட்டி என்னும் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியை சொடுக்கினால் அது செயலி ஒன்றை திறக்கும். அந்த செயலியை திறந்ததும் இணைய திருடர்கள், அந்த ஸ்மார்ட்போனை கைப்பற்றுவர். பின்னர் குறிப்பிட்ட போனிலுள்ள கோப்புகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவை பயன்படுத்தப்படமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக (என்கிரிப்ட்) செய்தி அனுப்புவர்.

மூன்று அல்லது ஏழு நாள்கள் என்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் அனுப்பினால் தாங்கள் அந்த படங்கள் மற்றும் வீடியோக்களை திரும்ப பெறுவதற்கு தொழில்நுட்ப உதவிகளை செய்வதாகவும் செய்திகளை அனுப்புவர். இதன் மூலம் பயனர்களை பிளாக்மெயில் செய்து இணைய திருடர்கள் பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

ஜூலை 12ம் தேதி முதல் இந்த ஏமாற்றுவேலை நடந்து வருவதாக இணைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். Reddit தளத்தில் பெரும்பாலும் ஆபாச பதிவுகள், படங்களுக்கான பின்னூட்டங்கள் மற்றும் XDA தளத்தின் பதிவுகளிலிருந்து சுட்டிகள் மற்றும் க்யூஆர் கோடுகளை அனுப்புகின்றனர்.

Android/Filecoder.C என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆபத்தான சுட்டியினை சொடுக்கும் பயனர்களின் ஸ்மார்ட்போன்களை இணைய திருடர்கள் கைப்பற்றுகின்றனர். பின்னர், அவர்கள் தொடர்பு பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் "உங்கள் படம் செக்ஸ் கேம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்க்க" என்ற குறுஞ்செய்தியை அனுப்புகின்றனர்.

இந்த செய்தி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 42 மொழிகளில் அனுப்பப்படுவதாகவும், நம்பிக்கையான நபரின் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வருவதால், பலர் பதற்றமடைந்து சுட்டியை சொடுக்கி, இணைய திருடர்களின் வலையில் விழுவதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற இணைய உலக ஆபத்து இருப்பதால், வரும் எல்லா குறுஞ்செய்திகளையும் நம்பி உடனடியாக செயல்படாமல் இருப்பது ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றும்.

'பணமே பிரதானமாகி விட்டது; அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல' - கர்நாடக சபாநாயகர் விளாசல்


Leave a reply