பொன்னமராவதி ஆடியோ விவகாரம் தொடர்பாக வதந்தியை பரப்பிய குகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சமூககத்தை மாற்று சமூகத்தை சோ்ந்த சிலர் இழிவாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேசமயம் அந்த அவதூறு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இந்த சூழ்நிலையில், காவல்துறையினர் அந்த ஆடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யவில்லை என்று கூறி காவல்துறை வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்களை சிலர் அடித்து நொறுக்கினர். மேலும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் மரங்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலவரம் கட்டுக்குள் வந்ததையடுத்து நேற்று 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
அவதூறு ஆடியோவில் உள்ள நபரை கைது செய்ய கலிபோர்னியாவில் உள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் உதவியையும் புதுக்கோட்டை போலீசார் நாடியுள்ளனர். இந்த சமயத்தில் சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட நபரின் புகை படத்துடன், இந்த நபர் தான் முதல் ஆடியோவை பகிர்ந்தவர், ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக ஆடியோவை வெளியிட்ட நபர் இவர் தான், இதை அதிக அளவில் பகிருங்கள் என்ற பதிவானது தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
அந்த பதிவு வேகமாக பரவியது. அந்த படத்தில் இருந்த தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாசாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், என் படத்துடன் தவறான பதிவை பரப்பி வருகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த வதந்தியை கொத்தமங்கலம் செல்வராஜ் என்பவர் மகன் குகன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் பரப்பி வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் குகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.