குமரியில் கன மழை எதிரொலி: அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

Aug 15, 2018, 17:39 PM IST

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.

மாவட்டத்தின் பெரிய அணையான பெருஞ்சாணி அணையிலிருந்து சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே நேரம் அணைக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீரால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் எதிரொலியாக அருகில் உள்ள கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட சாலைகள் நீரால் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வட்நேரே மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பெருஞ்சாணி அணையை 24 மணி நேரமும் கண்காணிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் கன மழை இன்றும் நீடித்து வருகிறது. மழையால் அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading குமரியில் கன மழை எதிரொலி: அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை