பாளையங்கோட்டை சிறையில் சாதி வாரியான கைதிகள் அறை?

சிறையில் சாதி வாரியான கைதிகள் அறை?

Sep 25, 2018, 11:08 AM IST

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதிவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Palayamkottai Jail


இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான சிறைகளுள் ஒன்று பாளையங்கோட்டை சிறை. அப்போது சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அடைத்து வைக்க இந்த சிறை பயன்படுத்தப்பட்டது. “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடிய  சுப்ரமணிய பாரதியார், சுதந்திர போராட்ட வீரர்களான, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் போன்றோர் இங்கு சிறை வைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

சுதந்திர வரலாற்றில் இடம் பெற்ற இந்த சிறையில், தற்போது கொடுங்குற்றம் புரிந்தோர், அரசியல் கைதிகள் போன்றோர் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும் உள்ளன.

117.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில், கைதிகள் சாதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி" என்கிறது ஔவையாரின் நல்வழி...

அந்த நல்வழியான நீதி, நெறிமுறை தவறிய குற்றவாளிகள் அடைக்கப்படும் பாளையங்கோட்டை சிறையில் சாதி பிரிவினை என்பது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உயர் அதிகாரிகள் எச்சரித்த போதிலும், சிறைக் கண்காணிப்பாளர்கள் சிலர், சாதி பெயரை வைத்தே கைதிகள் அழைக்கிறார்கள். இந்த நடைமுறையை மாற்ற பலமுறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பலனுமில்லை என்கிறார்கள் முன்னள் சிறை கைதிகள்.

Palayamkottai Jail

"138 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாளையங்கோட்டை மத்திய சிறையில், தேவர் சமூகத்திற்கு 4 வார்டுகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 2 வார்டுகள், நாடார் சமூகத்தினற்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை மறுக்கும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இது போன்ற நடைமுறை மாநிலத்தில் உள்ள எந்தசிறையிலும் கிடையாது என்றும் இது குறித்து விசாரணை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

“பல சாதிகளை சேர்ந்த கைதிகளை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” அந்த சிறையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.

"இந்த சாதி பிரிவிலான வழக்கம் 1984ல் இருந்து நடைமுறையில் உள்ளது. பல சாதியினரை ஒன்றாக வைத்தால் சிறையில் கொலை மற்றும் வன்முறைகளுக்கு வழி வகுக்கும். சாதி பிரிவிலான முறை கைதிகளை கட்டுப்படுத்த உதவும்"
என முன்னாள் சிறைத்துறை கண்காணிப்பாளர் கருத்து கூறுகிறார்.

நான்கு சுவர்களுக்குள்ளாவது சாதி பிரிவினை இல்லாது இருந்தால், சமுதாயத்தில் சாதி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதும், இது குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

You'r reading பாளையங்கோட்டை சிறையில் சாதி வாரியான கைதிகள் அறை? Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை