ஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்..? வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில்

Chris Gayle says, no retirement still i am in the w.indies team

by Nagaraj, Aug 15, 2019, 11:44 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியாகட்டும் அல்லது டி20, ஒரு நாள் போட்டிகளாகட்டும் புயல் வேக அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர் மே.இ.தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில். சிக்சர்களை பறக்க விடுவதில் கில்லாடியான கெயில், படைத்த சாதனைகள் கணக்கில் அடங்காது. மைதானத்தில் இவர் நின்றாலே சிக்சர், சிக்சர் என ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்து அவரை குஷியேற்றி விடுவர். கிறிஸ் கெய்லின் நடை, உடை, பாவனைகளும் தனி ரகம். நீண்ட முடி ஸ்டைலை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது எனலாம்.

கெயில் படைத்த சாதனைகளில் சில சாம்பிள்கள்:

நேற்றைய போட்டியுடன் சேர்த்து மே.இ.தீவுகள் அணி வீரர்களிலேயே அதிக ஒரு நாள் போட்டிகளில் (301) பங்கேற்று கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.

மொத்தம் 10,480 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த மே.இ.தீவு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதில் 25 சதம், 54 அரைசதம் அடங்கும்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரரும் கெயில் தான். 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 147 பந்தில் 215 ரன்களை அதிரடியாக குவித்தார். இதில் 16 சிக்சர், 10 பவுண்டரி அடங்கும். இதேபோல் மே.இ.வீரர்கள் யாரும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடித்ததில்லை.

சிக்சர்கள் விளாசியதிலும் கெய்ல் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசி (16) மே.இ.தீவுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதே போல் ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 331 சிக்சர்கள் விளாசி அதிலும் முதலிடத்தில் உள்ளார்.

இப்படி சாதனைகள் பல படைத்த கிறிஸ் கெயில் கடந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப் போகிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை மறுத்த மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுடனான தற்போதைய தொடர் வரை கெயில் ஆடுவார் என்றும், சொந்த நாட்டில் அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.

இதனால் நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியுடன் கிறிஸ் கெய்ல் ஒய்வு பெறப் போகிறார் என்று அனைவரும் நம்பினர். அதற்கேற்றாற்போல் நேற்றைய போட்டியில் செயல் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். அவர், 5 சிக்சர், 8 பவுண்டரி என விளாசி 41 பந்தில் 72 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஓய்வு பெற்றுவிட்டதாக நினைத்து, இந்திய வீரர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மே.இ.தீவுகள் வீரர்களும் பெவிலியனில் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். கெயிலும் வழக்கத்துக்கு மாறாக தனது பேட்டின் முனையில் ஹெல்மெட்டை கவிழ்த்தபடி ஸ்டைலாக மைதானத்தில் கரகோஷம் எழுப்பிய ரசிகர்களுக்கு கையசைத்தபடியே வெளியேறினார்.

இதனால் அவர் நேற்றைய போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டார் என்றே அனைவரும் நம்பினர்.போட்டி முடிவில் இந்தியா வெற்றி பெற்ற போதும், பீல்டிங்கில் இருந்த கெயிலுக்கு அனைவரும் ஸ்பெஷலாக கை குலுக்கி விடை கொடுத்தனர்.

ஆனால் போட்டி முடிந்த சில நிமிடங்களில் பேட்டியளித்த கிறிஸ் கெய்ல், தமக்கு வழியனுப்பு விழா நடத்திய அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து விட்டார். ஓய்வு பெறுகிறீர்களே? என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்ட வர்ணனையாளரிடம், நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை. இப்போதும் அணியில்தான் தொடர்கிறேன். அடுத்த அறிவிப்பு வரும்வரை அணியில் தொடர்வேன் என்று பட்டென்று தெரிவிக்க அனைவருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது. கை குலுக்கி, வாழ்த்து தெரிவித்த வீரர்களோ ஒன்றும் செய்வதறியாது நொந்தே போய் விட்டனர். 39 வயதான கெயில் இன்னும் எத்தனை போட்டிகளில் ஆடப் போகிறாரோ தெரியவில்லை.

இந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்

You'r reading ஓய்வு பெறுவதாக நான் எப்போ அறிவித்தேன்..? வழி அனுப்பிய வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கெயில் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை