சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் ரோகித் சர்மாவை இந்திய டி 20 அணியின் கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன்சி குறித்துத் தான் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை அணிக்கு 5 கோப்பைகளை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் கூறினார். இவர் மட்டுமல்ல, ரசிகர்கள் மத்தியிலும் இந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சர்ச்சைக்கு இடையே தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டியின் போது காயமடைந்த மாயங்க் அகர்வால் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் அணியில் இடம் பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரோகித் சர்மாவை ஓரங்கட்டுவதற்கு சதி நடக்கிறது என்று புகார் எழுந்தது. இதையடுத்து உடனடியாக அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் கவுதம் காம்பிருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேனும் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: ரோகித் சர்மாவுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் திறமை இருக்கிறது. எனவே அவரை இந்திய அணியின் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும். அவரது கேப்டன்சியை குறித்து தனியாக எதுவும் கூற வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுத்த பல முடிவுகள் மும்பை அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது. எனவே இந்திய டி20 அணிக்கு விராட் கோஹ்லிக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ரோகித்திடம் ஒப்படைக்க இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். ரோகித்தின் இதுவரை உள்ள சாதனைகள் அவருக்காக பேசும். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆவார் என்று அவர் கூறினார்.