லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுகவில் யுத்தம் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என திமுக சீனியர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் அடம்பிடிக்கிறார்களாம்.
லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, தினகரனின் அமமுக என அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாமக. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக ஆகியவை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இது திமுகவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என திமுக சீனியர்கள் நினைக்கின்றனர். துரைமுருகனைப் பொறுத்தவரையில் வேலூர் தொகுதியில் மகனை ஜெயிக்க வைக்க பாமக தயவு தேவை என நினைக்கிறார்.
அதேபோல் தம் மகனையும் எம்.பி.யாக்க கனவு காணும் பொன்முடியும் பாமக ஆதரவு தேவை என்கிற முடிவில் இருக்கிறார். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த பொன்முடியும் எ.வ.வேலுவும் இணைந்தே பாமக ஆதரவு தேவை என வலியுறுத்துகிறார்களாம்.
திண்டுக்கல்லில் வன்னியர்கள் சுமார் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள்... அவர்களது ஆதரவு நமக்கு கட்டாயம் தேவை என ‘மருமகளை’ எம்.பியாக்கும் கனவுடன் பேசுகிறாராம் ஆத்தூர் ஐ.பி. இப்படி திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி இருக்கும் அனைத்து சீனியர்களுமே பாமகவை கூட்டணியில் சேர்த்தே ஆக வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆனால் ஸ்டாலினின் கிச்சென் கேபினட்டின் தளகர்த்தரான ‘மாப்பிள்ளை’ முதலியார் லாபி செய்து கொண்டிருக்கிறாராம்...சீனியர்கள் போடும் கணக்குகளை அவர் கண்டு கொள்வதே இல்லையாம்.. இதனால் கடுப்பாகிப் போன சீனியர்கள், லோக்சபா தேர்தலில் நீங்கள் ஜெயித்தால்தான் சட்டசபை தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது.. இதை கவனத்தில் கொள்ளுங்கள் என கண்டிப்பான குரலில் சொல்லியிருக்கிறார்களாம்.
-எழில் பிரதீபன்