கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் பைக் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார் . அவருக்குத் திருமணமாகி ஒரு மகனும்,மகளும் உள்ளனர். கடை மூலம் குடும்பத்திற்குத் தேவையான செலவைச் செய்து வந்துள்ளார் .குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுள்ள நிலையில், போதிய வருமானம் இல்லாத நிலையில் குடும்ப செலவுக்காக ரூபாய் 40000 கடனாக (கந்துவட்டி) பெற்றுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாகப் பணத்தை திரும்பச் செலுத்த முடியவில்லை. கடன் வாங்கிய பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு அந்தோணி ராஜுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர் கந்துவட்டிக்காரர்கள் .
கந்துவட்டிக்காரர்களின் தொடர் அச்சுறுத்தலால் மனமுடைந்த அந்தோணி ராஜ் அவரது மனைவி,மகன் மற்றும் மகள் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார் .இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர் .பின்னர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அவர்களை அழைத்துச் சென்றனர் .
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும் போது, தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.