ஈசா பல்லாவரத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்

by SAM ASIR, Aug 29, 2018, 21:00 PM IST

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் காஞ்சிபுரம் மாவட்டம் ஈசா பல்லாவரத்தில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

Disabled Children Camp

அதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஆகஸ்ட் 29, புதன்கிழமை காலை பல்லாவரத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அரசு அளிக்கும் உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை பயிற்சி பெறும் குழந்தைகள் ஏந்தி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் தோமையர்மலை (நகரம்) வட்டார வள மைய கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகசாமி, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின் லதா, ஆசிரியர் பயிற்றுநர் இருதயராணி ஹெரின் உள்பட சிறப்பாசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் இங்கு நடைபெற உள்ள முகாமில் பிறந்தது முதல் 18 வயது வரையிலான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், பராமரிப்பு மற்றும் கல்வி உதவி தொகை, ரயில் பயண சலுகை, பாதுகாவலர் பயண சான்று, முதல் அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பயிற்சி இவற்றுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாம் குறித்த விவரங்களை 044-22643997 / 9788858675 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

You'r reading ஈசா பல்லாவரத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை