கூட்டணிக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு திமுகவும் அதிமுகவும் கூட்டணிப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதில், எடப்பாடி பழனிசாமி ஸ்கோர் செய்வதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதி செய்வதற்காகக் கடந்த சில நாட்களாக சபரீசனும் கனிமொழியும் டெல்லியில் கேம்ப் அடித்திருக்கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறியும் நீடித்தது.
இன்று மாலைக்குள் எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம் எனக் கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இதைப் பற்றிப் பேசும் அதிமுக பொறுப்பாளர்கள், பாஜகவுக்கு நாங்கள் அடிமையாக இருக்கிறோம் என ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர்களும் கிண்டல் அடித்தனர்.
ஆனால் பாஜகவை 5 சீட்டுக்குள் அடக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதில் அவருடைய ராஜதந்திரம்தான் ஜெயித்தது. கிரவுன் பிளாசா ஓட்டலுக்கே பியூஷ் கோயலை வரவழைத்தார் எடப்பாடி.
அதிமுக கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு டெல்லி தள்ளப்பட்டது. இந்தக் கூட்டணியும் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் நோட்டாவோடுதான் போட்டி போட முடியும் என அவர்கள் பயப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி முகாமில் எத்தனை சீட் என்பதை உறுதிப்படுத்தவே டெல்லியில் தங்கியிருக்கிறார்கள்.
அவர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. எடப்பாடி எப்படிப்பட்டவர் என்பதை தேர்தல் முடிவில் ஸ்டாலின் உணர்ந்து கொள்வார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள்.
அருள் திலீபன்