இஷாந்த் வேகத்தில் மே.இ.தீவுகள் பரிதாபம்... ஆன்டிகுவா டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா

by Nagaraj, Aug 24, 2019, 10:03 AM IST

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இஷாந்த் வேகத்தில் 5 விக்கெட்டுகளை காலி செய்ய மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து பரிதாபமாக உள்ளது.

இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்த இந்தியா நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் நாளில் 20 ரன்களுடன் இருந்த ரிஷப் பன்ட் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட்டானார். பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா வழக்கத்திற்கு மாறாக மிகப் பொறுமையாக தற்காப்பு ஆட்டம் ஆட மறுமுனையில் ஜடேஜா மளமளவென ரன்களை குவித்தார். இதனால் இந்திய அணியின் ரன் கணிசமாக உயர்ந்தது. இஷாந்த் சர்மா 62 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அபாரமாக ஆடி அரைசதம் கடந்த ஜடேஜா 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 297 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டானது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய மே.இ.தீவுகள் அணிக்கு இஷாந்தும், சமியும் வேகத்தில் தொல்லை கொடுத்தனர். இதனால் ரன் சேர்க்க திணறிய மே.இ.தீவு வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இஷாந்த் மிரட்டலில், அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்து மே.இ.தீவுகள் அணி பரிதாபமான நிலையில் உள்ளது. ஹோல் பர் (10), கம்மின்ஸ் (0) ஆட்டமிழக்காமல் உள்ளனர். அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், ஷமி,பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் பிராவோவின் விக்கெட்டை சாய்த்ததன் மூலம் மிகக் குறைந்த பந்து காரில் (2464) 50 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய வீரர் என்ற அஸ்வினின் (2597) சாதனையை முறியடித்தார்.

மே.இந்திய தீவுகள் அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தியதன் மூலம் தற்போது இந்திய அணி 108 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 2-வது இன்னிங்சில் கணிசமான ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் : இந்தியா vs மே.இ.தீவுகள் இன்று முதல் மோதல்


More Sports News