அதிமுக கூட்டணியில் தருமபுரியா..ஆரணியா என்பதைப் பற்றிய யோசனையில் அன்புமணி இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளைக் கணக்கில் கொண்டுதான் அவர் தீவிர ஆலோசனையில் இருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், கேபினட் வரையில் கிடைப்பதற்கு என்ன வழி என்றும் யோசித்து வருகிறார்கள். பசுமைத் தாயகம் உள்பட சுற்றுச்சூழல் விஷயங்களில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகளும் அன்புமணியின் மனைவியுமான சௌம்யா ஈடுபட்டு வருகிறார்.
அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பத் தயாராகி வருகிறது பாமக. தேர்தலில் நின்று போராடுவதைவிட, அதிமுக கொடுக்கப் போகும் ராஜ்யசபா சீட்டை மனைவிக்குக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளார் அன்புமணி. அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னால் திமுக தரப்பிடமும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
அவர்களது கோரிக்கைகளை ஏற்கும் முடிவில் ஸ்டாலின் இல்லை என்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருந்தார். அவர் ஒருபுறம் முயற்சி செய்து கொண்டிருந்தாலும், அதிமுக கூட்டணியே சரியானது என உறுதியான முடிவை எடுத்துவிட்டார் ராமதாஸ்.
இதனால் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. இப்போது வேறுவழியில்லாமல் அதிமுக கூட்டணிக்குத் தலையசைத்துவிட்டாராம் அன்புமணி. ஜெயலலிதாவைப் போல ராஜ்யசபா சீட்டைக் கொடுக்காமல் ஏமாற்றிவிடக் கூடாது எனக் கண்டிப்பான குரலில் உத்தரவிட்டுள்ளது தைலாபுரம்.
- அருள் திலீபன்