உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாதது ஏன்? நாங்குனேரியில் ஸ்டாலின் கேள்வி

M.K.Stalin started campaign in nanguneri constituency

by எஸ். எம். கணபதி, Oct 8, 2019, 23:34 PM IST

அதிமுக அரசு இவ்வளவு நாளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு காரணம் அதிமுக தோற்கும் என்பதால்தான் என்று நாங்குனேரியில் ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்.8) நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாளையசெட்டிகுளம், அரியகுளம், மேலகுளம், உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது:

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களோ, ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களோ, இதுவரை ஒரு முறையேனும் உங்களை நேரடியாக வந்து சந்தித்து, உங்கள் குறைகளைக் கேட்டிருக்கிறார்களா? இப்படிக் கேட்டது கிடையாது.
எதிர்க்கட்சியாக இருக்கின்ற இந்தநேரத்திலும், தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊராட்சிகளுக்கும் சென்று, அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்களிடமெல்லாம் குறைகளைக் கேட்டிருக்கிறோம். குடிநீர்ப் பிரச்சினை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, நூறு நாள் வேலை வாய்ப்புப் பிரச்சினை, ரேஷன் கடைப் பிரச்சினை, சாக்கடைப் பிரச்சினை, பேருந்து வழித்தடப் பிரச்சினை, மருத்துவமனை இல்லாத சூழ்நிலை, மகளிர் சுய உதவிக் குழு பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கூறினீர்கள். இந்த பிரச்சினைகள் எல்லாம் மிகச் சுலபமாகத் தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினைகள். இதற்கு, பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆட்சி கடந்த 8 ஆண்டுகளாக நடத்தவில்லை. ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி என பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தலைவர்கள் இருந்தார்கள் என்றால், இந்த சின்னச் சின்னப் பிரச்சினைகளை எல்லாம் எளிதாகத் தீர்த்து வைக்க முடியும். அந்த உள்ளாட்சித் தேர்தலை இதுவரை நடத்தவில்லை. ஏன் நடத்தவில்லை என்றால், இதில் அ.தி.மு.க வெற்றி பெறாது என்று அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால், வேண்டுமென்றே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.
அதனால்தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தி.மு.க.தான் அடுத்து தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். இப்போது நீங்கள் சொன்ன அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகச் செய்து முடித்திட முடியும்.

உங்களுடைய குறைகளை ரூபி மனோகரன் மூலமாக தீர்த்துவைக்கும் பணிகளிலும் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வேன் என்ற அந்த உறுதியை உங்களிடத்தில் எடுத்துச் சொல்லி, வரும் 21ம் தேதி நடைபெறும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ரூபி மனோகரனுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.
கொள்ளையடிப்பதற்கு – கமிசன் வாங்குவதற்கு – ஊழல் செய்வதற்கு – கரப்ஷன் – கலெக்ஷன் – கமிஷன் போன்ற வேலைகளில் ஈடுபட்டுத்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. மக்களைப் பற்றி இப்பொழுது இருக்கும் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவலைப்படுவதேயில்லை.

எப்படி நீங்கள் தி.மு.க.,வின் மீதும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மீதும், அதேபோல், எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளின் மீதும் நம்பிக்கை வைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்தீர்களோ, அதேபோல், இப்போது இந்த நாங்குநேரி தொகுதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலிலும் வாக்களித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

You'r reading உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்தாதது ஏன்? நாங்குனேரியில் ஸ்டாலின் கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Tirunelveli News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை