மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!!

Whether priyanga gandhi will contest against modi in varanasi?

Apr 22, 2019, 08:28 AM IST

பிரதமர் மோடிக்கு எதிராக பொது வேட்பாளராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நிறுத்துவார்களோ என்று உச்சகட்ட திகிலில் பா.ஜ.க.வினர் இருக்கிறார்கள்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திர மோடி கடந்த முறை தனது குஜராத் மாநிலத்தில் வதேதரா மக்களவை தொகுதியிலும், உத்தரபிரதேசத்தில் வாரணாசி மக்களவை தொகுதியிலும் போட்டியி்ட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார். அப்போது, காங்கிரஸ் கூட்டணி அரசு மீது மக்கள் கடுங்கோபத்தில் இருந்தனர். அதனால் மோடிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது. ஆனால், இந்த முறை மோடிக்கு எதிரான மனநிலையே மக்களிடம் வெளிப்படுகிறது.

   வாரணாசியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்றிருப்பதால் மோடியின் செல்வாக்கு குறையவில்லை என்றாலும் கடந்த முறை போல் செல்வாக்கு இருக்கிறதா என்றால் அது சந்தேகம்தான்! மேலும், வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு என்று பல்வேறு துறைகளி்ன் நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து தாக்குகிறார் மோடி என்று அனைத்து எதிர்க்கட்சிகளுமே குற்றம்சாட்டுகின்றன. இதனால், மோடியை எதிர்ப்பதில் மட்டும் எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கைகோர்த்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இவர்கள் மோடியின் வாரணாசி தொகுதிக்கான வேட்பாளரை இது வரை அறிவிக்கவில்லை.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முழுவதும் சுற்றி வந்து  பிரச்சாரம் செய்கிறார். மேலும், அமேதியில் கட்சித் தொண்டர்கள் அவரிடம், ‘‘நீங்கள் இங்கு போட்டியிடுங்கள்’’ என்று சொன்னதும், ‘‘ஏன், நான் வாரணாசியில் போட்டியிட வேண்டாமா?’’ என்று கேட்டார். அவ்வளவுதான். அதிலிருந்து அவர்தான் மோடியை எதிர்த்து போட்டியிடப் போகிறார் என்ற பரபரப்பான பேச்சு உலா வரத் தொடங்கியது. போதாக்குறைக்கு அவரது கணவர் ராபர்ட் வதேரா கூறுகையில், ‘‘பிரியங்கா சிறந்த தலைவராகி விட்டார். அவரை மக்கள் விரும்புகிறார்கள். அவர் வாரணாசியில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும்’’ என்றார். 

தற்போது, வாரணாசியில் நாளை(ஏப்.22) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 29ம் தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும். அதற்குள் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். ஆனால், இது வரை மோடியை எதிர்த்து யார் போட்டியிடப் போகிறார்கள் என்றே தெரியவி்ல்லை.

இந்த சூழலில், ராகுல்காந்தியிடம், ‘‘வாரணாசியில் பிரியங்கா நிறுத்தப்படுவாரா?’’ என்று கேட்டதற்கு, ‘‘சஸ்பென்ஸ்’’ என்று பதிலளித்து, பா.ஜ.க.வினருக்கு திகில் ஊட்டியிருக்கிறார். காரணம், சமாஜ்வாடி-பகுஜன் கூட்டணியும், ஆம் ஆத்மியும் இது வரை வேட்பாளர்களை அறிவிக்காததுதான். அவர்கள் அனைவரும் பிரியங்காவை பொது வேட்பாளராக நிறுத்தினால், மோடியின் பாடு திண்டாட்டம்தான்!

 ஏனென்றால், கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மிகுந்த செல்வாக்கு இருந்த போது அவர் பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 81,022. அவருக்கு அடுத்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 09,238. காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 75,614 வாக்குகளும், பகுஜன் வேட்பாளர் விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால் 60,579 வாக்குகளும், சமாஜ்வாடி வேட்பாளர் கைலாஷ் 45,291 வாக்குகளும் பெற்றனர். ஆக, 50 சதவீத வாக்குகளை மோடி பெற்றிருந்தாலும், மீதி 50 சதவீத வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கின்றன. அந்த மோடி அலையில் எதிர்க்கட்சிகள் 50 சதவீத வாக்குகளை பெற்றிருக்க, இப்போது மோடி செல்வாக்கு குறைந்த நேரத்தில் பொது வேட்பாளரை நிறுத்தினால்..? அதுவும் அந்த வேட்பாளர் பிரியங்கா காந்தி என்றால்..?

You'r reading மோடியை எதிர்ப்பது யார்? மிரட்டும் எதிர்க்கட்சிகள்!! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை