நில அபகரிப்பாளர்கள் மீது கருணை கூடாது - நீதிமன்றம் காட்டம்

நில அபகரிப்பாளர்கள் மீது கருணை காட்டக் கூடாது

Sep 1, 2018, 19:57 PM IST

நில அபகரிப்பாளர்கள் மீது கருணை காட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

High Court

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சைக்கிள் கடை நடத்தி வந்த சேகர் என்பவர், அந்த கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதாகக் கூறி, கட்டிடத்தை இடித்து கட்ட முயற்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லோகநாதன், கட்டிடத்தில் இருந்து காலி செய்யக் கோரி சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என வேப்பேரி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடக் கோரி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, லோகநாதனின் தந்தை, கடையை தனக்கு விற்பனை செய்து விட்டதாகவும், ஆனால் பத்திரப் பதிவு செய்யப்படவில்லை என்றும் சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, உடனடியாக கடையை காலி செய்து லோகநாதனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். மேலும், சென்னை நகரில் நிலங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், ரியல் எஸ்டேட் மாபியாக்கள், நில அபகரிப்பாளர்கள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார்.

வயதானவர்கள், தனியாக இருப்பவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் கும்பலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நீதிபதி, பிறர் நிலத்தை அபகரிப்பவர்கள் மீது கருணை காட்டக் கூடாது எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

You'r reading நில அபகரிப்பாளர்கள் மீது கருணை கூடாது - நீதிமன்றம் காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை