அமைச்சர் வேலுமணி மீது புகார்- உயர்நீதிமன்றத்தில் திமுக எதிர்ப்பு

Oct 3, 2018, 13:13 PM IST

 

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களுக்கு உள்ளாட்சி துறை ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம், பல கோடி ரூபாய் முறை கேட்டில் ஈடுபட்டிருப்பதாக திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த மாதம் 10ஆம் தேதி புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்தப் பணிகளை தனது பினாமிகளான உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

மேலும், 942 கோடிரூபாய் உபரி வருவாயை கொண்டிருந்த சென்னை மாநகராட்சி, எஸ்.பி.வேலுமணி பதவி ஏற்ற பின் தவறான நிர்வாகத்தால் ரூ. 2,500 கோடி கடன் பெறும் நிலைக்கு தள்ளியுள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்த மனுவுக்கு ஆதரவாக 3000 பக்க ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர் மீதான புகார் குறித்து விசாரிக்க அனுமதி கோரி அரசு தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறி, கடித நகலை தாக்கல் செய்தார். மேலும், சட்டப்படி அந்த கடிதத்தின் மீது முடிவெடுக்க தலைமைச் செயலாளருக்கு மூன்று மாத அவகாசம் உள்ளதாகவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஊழல் தடுப்பு சட்டத்தின் புதிய திருத்தப்படி, அரசு ஊழியர்கள் மீதான புகார் மீது விசாரணை நடத்த ஆளுநரிடம் தான் அனுமதி பெற வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதத்துக்காக, நீதிபதி வரும் 23ஆம் தேதி விசாரணையை தள்ளிவைத்தார்.

You'r reading அமைச்சர் வேலுமணி மீது புகார்- உயர்நீதிமன்றத்தில் திமுக எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை