கஞ்சாவிலிருந்து தயாரிக்கும் மருந்து - பிரிட்டன் அனுமதி

கஞ்சாவிலிருந்து தயாரிக்கும் மருந்து

Jul 27, 2018, 17:19 PM IST

மரிஜ்வானா என்னும் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை நோயாளிகளுக்கு அளிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

Marijuana

பிரிட்டன் உள்துறை செயலர் ஸாஜித் ஜாவித், அசாதாரண மருத்துவ சூழல்களில் சிறப்பு மருத்துவர்கள் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை பரிந்துரைக்கும்படி சட்ட திருத்தங்கள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

“நோயுற்றோரின் அவதியை போக்கும்படியாய் மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் கஞ்சா தயாரிப்பு மருந்துகள் கிடைக்க அனுமதி வழங்கப்படுகிறது. நமக்கு அன்பானவர்கள் அவதிப்படுவதை பார்க்க நேரிடுவது கடினமான ஒன்று. அதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன்," என்று டுவிட்டர் பதிவில் ஜாவித் கூறியுள்ளார்.

இவ்வித மருந்தை பயன்படுத்தலாமா என்று பரிசீலிக்க அரசு, நிபுணர்களை கேட்டுக்கொண்டிருந்தது. அரசின் தலைமை மருத்துவ ஆலோசகர் சால்லி டேவிஸ், கஞ்சாவுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை குறித்த ஆலோசனை குழுவினர், அடுத்தக் கட்ட பரிசீலனை செய்தனர். கடந்த வாரம் அந்தக் குழு, மருத்துவர்கள் அந்த மருந்துகளை பரிந்துரைக்கலாம் என்று கூறியுள்ளது. அதன்படி அசாதாரண சூழலில் இம்மருந்தினை பயன்படுத்த அனுமதிக்கும் முடிவு எட்டப்பட்டது.

வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்த பில்லி கால்டுவெல் என்ற 13 வயது சிறுவனுக்கு சிறப்பு அனுமதியின்பேரில் இம்மருந்து வழங்கப்பட்டது. அவனுக்கு ஆச்சரியப்படத்தக்க குணம் தெரிவதாக அவனது தாயார் சார்லட் கால்டுவெல் தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியில் இது குறித்து புதிய விதிகள் வகுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜாவித், கஞ்சாவை போதைக்காக பயன்படுத்த முடியாது. சட்டப்பூர்வமல்லாத விதத்தில் கஞ்சாவை வைத்திருப்பதும், விநியோகிப்பதும் தண்டனைக்குரியது என்ற நிலை தொடரும் என்றும் கூறியுள்ளார்.

You'r reading கஞ்சாவிலிருந்து தயாரிக்கும் மருந்து - பிரிட்டன் அனுமதி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை