முல்லைபெரியாறு அருகே புதிய அணை அமைக்கப்படுவதற்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைபெரியாறு அணையிலிருந்து வெறும் 1200அடி கீழ்திசையில் புதிய அணை அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. புதிய அணையின் உயரம் 174.6அடி, நீளம் 1214அடி என்றும் இதற்கு துணை அணையாக 82அடியில் இன்னொரு அணையும் கட்டப்படவுள்ளது. இதற்காக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய சுற்றுச்சூழல்துறை முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள அரசின் இந்த திட்டம்,தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன், "புதிய அணை அமைக்கப்படுவது தமிழகத்தில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தமிழகத்தின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதுடன், வஞ்சக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மற்றொரு தாக்குதலே இந்த அனுமதியாகும்" எனக் கூறினார்.
" தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாடி இத்திட்டத்தை தடுக்க வேண்டும். இரு மாநில மக்கள்-விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி, புதிய அணை முயற்சியைக் கேரள அரசு கைவிடவேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.