மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார் ராகுல் காந்தி. புதிய தலைவராகியுள்ள ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான அழகிரி தமிழக காங்கிரசில் உள்ள கோஷ்டித் தலைவர்களை சமாளித்து வெற்றிக் கொடி நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்த ராகுல், பதவியைப் பறித்துவிட்டார். மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் பதவி பறிபோகாது என்றே பெரும் நம்பிக்கையில் இருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் டெல்லியில் செல்வாக்குடன் வலம் வரும் ப.சிதம்பரம் மேலிடத்தில் நெருக்கடி கொடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தமது ஆதரவாளரான கே.எஸ் அழகிரியை கொண்டு வந்து விட்டார்.
இருமுறை எம்எல்ஏ, ஒரு தடவை எம்பியாக இருந்துள்ள அழகிரி தமிழக காங்கிரசில் பிரபலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ப.சிதம்பரம் தயவில் தலைவர் பதவியைப் பிடித்து விட்டார். இதனால் இனி ப.சிதம்பரம் கோஷ்டியின் கை தான் ஓங்கப் போகிறது. ஈ.வி.கே.எஸ், தங்கபாலு, கிருஷ்ணசாமி என தமிழக காங்கிரசில் கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாத நிலையில் இவர்களை எல்லாம் சமாளித்து மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டுவாரா அழகிரி என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
போதாக்குறைக்கு எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை தமிழக காங்கிரசுக்கு நான்கு செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மண்டலத்துக்கு வசந்தகுமார், மத்திய மண்டலத்துக்கு கே.ஜெயக்குமார், கொங்கு மண்டலத்துக்கு மயூரா ஜெயக்குமார், வடக்கு மண்டலத்துக்கு விஷ்ணுபிரசாத் என 4 செயல் தலைவர்களை நியமித்துள்ளார் ராகுல் .ஒரளவுக்கு கோஷ்டிகளை சமாளிக்கும் எண்ணத்தில் தான் 4 பேருக்கு செயல்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதனால் தமிழக காங்கிரசில் கோஷ்டிகள் எண்ணிக்கை தான் அதிகரிக்கப் போகிறது என்கிறது காங்கிரசில் ஒரு தரப்பு .