ஆசிரியராக நினைவுகூரப்படவே விரும்புகிறேன் - அப்துல் கலாம்

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை

by SAM ASIR, Sep 5, 2018, 08:20 AM IST

தனி மனிதனுடைய வாழ்க்கையில் ஆழமாக தடம் பதிக்கும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கே கிடைக்கிறது.

Dr Radhakrishnan

சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்குப் படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரைப் பற்றிய நினைவாவது கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான என். சந்தோஷ் ஹெக்டே, தான் நீதிபதியாவதற்கு தனது ஆசிரியரான கல்மஞ்சே ஜெகநாத ஷெட்டியே காரணம் என்று தமது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

"படிக்கும் நாட்களில் ஹாக்கி விளையாட்டின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நல்ல ஹாக்கி அணியை கொண்ட நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர வேண்டும் என்றே நான் படிக்கச் சென்றேன். படித்து முடித்து, அந்தத் தகுதியை கொண்டு வேலைக்குச் சேர்ந்து ஹாக்கி விளையாட வேண்டுமென்பதே என் விருப்பமாக இருந்தது.

கல்லூரி ஹாக்கி அணிக்கு கேப்டனாகவும் இருந்தேன். ஆனால், அப்போது அரசு சட்ட கல்லூரியில் பேராசிரியராக இருந்த கல்மஞ்சே ஜெகநாத ஷெட்டி, என் மீது தனி கவனம் செலுத்தி நான் தொடர்ந்து படிக்கும்படி ஊக்குவித்தார். பின்னர் அவர் அலஹபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உயர்ந்தார்.

அதற்கு முன்பு அவரிடம் என்னை ஜூனியராக சேர்த்துக்கொண்டு, சிறு சிறு வழக்குகளில் ஆஜராக வைத்தார். சட்ட நுணுக்கங்களை கற்றுத் தந்தார். அன்று அவர் என்னை அப்படி வழிநடத்தியிராவிட்டால், நான் என்னவாகியிருப்பேன் என்று தெரியவில்லை" என்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, தன் மனதில் பதிந்த ஆசிரியரைப் பற்றி கூறியுள்ளார்.

Abdul Kalam

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5, அவர் குடியரசு தலைவர் பொறுப்பு வகித்த 1962ம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பேராசிரியராக, பின்னர் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆசிரிய பணியை உயர்வாக எண்ணியதன் காரணமாக தமது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமும் ஆசிரிய பணியை அதிகம் நேசித்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய அப்துல் கலாம், 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி, மேகாலாயா மாநிலம் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கழக (ஐ.ஐ.எம்) மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தேபோதே, உயிரிழந்தார். தமது கடைசி மூச்சு வரைக்கும் அறிவை பகிர்ந்து கொள்ளும் சேவையை அவர் செய்தார்.

"ஒரு தனி மனிதனுடைய குணம், திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னத பணி ஆசிரியர்களுடையது. இளம் சமுதாயம் கனவுகளால் நிறைந்திருக்கிறது. வேதனைகளுக்கும் அவர்களுக்கு இருக்கிறது. இந்தியா, செழிப்பான, மகிழ்ச்சியான நாடாக இருக்க வேண்டும். அதில் தாங்கள் சமாதானமாக வாழவேண்டும் என்று அவர்கள் கனவு காணுகின்றனர்.

அந்தக் கனவே அவர்களது வேதனைக்குக் காரணம். இளைய சமுதாயத்தினர் இருக்கும் இத்தகைய சூழ்நிலையே அவர்களோடு உரையாடும்படி என்னை தூண்டுகிறது. ஒரு நல்ல ஆசிரியராக என்னை மக்கள் நினைவுகூர்ந்தால் அதையே எனக்குக் கிடைக்கும் பெரிய மரியாதையாக கருதுவேன்," என்று அவர் கூறியுள்ளார்.

இன்று ஆசிரியர் பணி அதே சேவை மனப்பான்மையுடன் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை தற்போது கேள்விப்படும் சம்பவங்கள் நம் மனதில் எழும்புகின்றன. படிக்க வரும் சிறுமியரை தவறான நோக்கத்தில் அணுகும் ஆசிரியர்களை பற்றிய செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

சேலம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "ஆரம்ப பள்ளி தலைமையாசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் ஊதியமும் 160 நாள் விடுமுறையும் கிடைக்கிறது. இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்," என்று பேசியது, அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு ஆசிரியர்களைப் பற்றி என்ன எண்ணம் உள்ளது என்பதை காட்டுகிறது.

Teacher Bhagawan

அனைத்து ஆசிரியர்களையும் ஒட்டுமொத்தமாக குறைகூறிவிட முடியாது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பகவான் என்ற ஆசிரியர் பணிமாற்றம் செய்யப்பட்டபோது மாணவ மாணவியர் கதறி அழுத சம்பவத்தை ஊடகங்கள் விரிவாக பதிவு செய்தன. தான் பணியாற்றிய பள்ளியில் போதித்த ஆங்கில பாடத்தில் நூறு சதவீத தேர்ச்சியை ஆசிரியர் பகவான் கொடுத்திருந்தார். அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் இவ்வளவு அர்ப்பணிப்போடு பணிபுரிந்தால், அது வேலையாக அல்லாமல் சேவையாகவே அமையும்.

ஆசிரியர் பணி இன்று சவால்கள் நிறைந்ததாக மாறி விட்டது. சமுதாயம் மாறிப் போனதால், கற்பித்தல் மிகவும் கடினமான ஒன்றாகிப் போனது. ஆரம்ப வகுப்பு மாணவ மாணவியர், ஆசிரிய ஆசிரியைகள் மேல் மிகவும் அன்போடு இருக்கின்ற போதிலும், பதின்ம வயது மாணவ மாணவியர் பெரும்பாலும் ஆசிரிய ஆசிரியைகளை எதிரிகளாக, கிண்டலுக்கு வெறுப்புக்கு உரித்தானவர்களாக பார்க்கின்றனர். கல்வியின் அருமையை, தேவையை உணராத மாணவ மாணவியர் உரிமை என்ற பெயரில் பள்ளியின் ஒழுங்குமுறைகளை மீறவே முயல்கின்றனர்.

ஆசிரியர்களின் மனக்குமுறல் வித்தியாசமானதாக உள்ளது. "புதிய பாடத்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஆசிரியர் பணியிடங்களை குறைத்து விட்டு யாரை வைத்து பாடம் நடத்த முடியும் என்பது தெரியவில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போதுள்ள மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளை மூட சொல்கிறது. தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிகள் மூடக்கூடிய அபாயத்தில் உள்ளன," என்று அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை கூட்டம் ஒன்றில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003 ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆசிரியர்களுக்கு தொகுப்பூதிய காலத்தை காலமுறை ஊதியத்தில் நிர்ணயம் செய்து பணி வரன்முறை செய்ய வேண்டும். சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்புதல் போன்ற கல்வி அல்லாத பணிகளை கொடுத்து பணிச்சுமையை கூட்டக்கூடாது.

பணி நிரவல் மூலம் ஆசிரியர்களை உபரியாக காட்டுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கை. போதிக்கும் பணி செய்யும் ஆசிரியர்கள், மகிழ்ச்சியோடு அதை செய்வதற்கு வழி செய்ய வேண்டும்.

பெரும் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியருக்கும் அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கும் உள்ள சமுதாய வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ளது போன்றதாகும். அதுபோன்ற பள்ளிகளில் பணிபுரியும் பகவான் போன்ற ஆசிரியர்கள், இன்றும் மரியாதைக்கு உரியவர்களே!

சேவை மனப்பான்மை கொண்ட அத்தனை ஆசிரிய ஆசிரியைகளுக்கும் நமது ஆசிரியர் தின வாழ்த்துகள்! (தொகுக்கப்பெற்றது)

You'r reading ஆசிரியராக நினைவுகூரப்படவே விரும்புகிறேன் - அப்துல் கலாம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை