குலசேகரபட்டினத்தில் தசரா விழா கொடியேற்றம்

Mutharamman Temple Dussehra Festival

Oct 10, 2018, 10:57 AM IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனைதொடர்ந்து கம்பத்தில் தசரா விழாவுக்கான கொடியேற்றப்பட்டது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தசரா கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


இன்று தொடங்கிய திருவிழா வரும் 21ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது. 10ஆம் நாளான வருகிற 19ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


கொடியேற்றத்தை தொடர்ந்து, நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் காப்பு அணிவித்தனர். காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூல் செய்து 10-ம் நாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

தசரா விழாவையொட்டி, சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

You'r reading குலசேகரபட்டினத்தில் தசரா விழா கொடியேற்றம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை