விடாது கருப்பு போல தமிழகத்தை காவு வாங்கும் வேதாந்தா... ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மீண்டும் வெடிக்கும் போராட்டம்..!

Tn people objects Central government s Permission to Vedantas hydro carbon project and ready for big protest

by Nagaraj, May 13, 2019, 15:09 PM IST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா, 247 ஹைட்ரோகார்பன் கிணறுகளையும், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி 67 எண்ணெய் கிணறுகளையும் டெல்டா மாவட்டங்களில் அமைப்பதற்கு அவசரமாக அனுமதி வழங்தியுள்ளது சுற்றுச் சூழல் அமைச்சகம்.

முன்பு நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை எடுக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் தற்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதியின் கீழ் ஒரு இடத்தில் ஹைட்ரோகார்பன் உள்ளது என கண்டறியப்பட்டால் அங்கு உள்ள அனைத்து இயற்கை வளங்களையும் எடுத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அரசுடன் பகிர்ந்துகொண்டால் போதும் என 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.முன்னதாக ஏப்ரல் மாதம் 14-ம் தேதி 27 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கூடுதலாக 40 கிணறுகளுக்கு ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஒட்டுமொத்த நீராதாரமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், விவசாய கள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் என ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மீண்டும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரிவாக விவரித்துள்ளதுடன், எதிராக பெரும் போராட்டமே வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தில் தமிழகத்தில் 3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் - தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள தரைப் பகுதி வட்டாரத்தில் 731 சதுர கி.மீ. ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த இந்திய அரசின் ஓஎன்ஜிசி. நிறுவனத்திற்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் மாவட்டம் வரையிலான கடல் பகுதி வட்டாரத்திலும், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் இரண்டு வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா குழுமம் ஆகியவை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கடந்த10-ந் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நீரியல் விரிசல் முறையில் (Hydro Fracking) 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரை எல்லா பக்கங்களிலும் துளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டுத் துளைகளில் செல்லும் நீர் அந்தத் துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே பூமிக்கடியில் அடைபட்டுக் கிடக்கும் எரிவாயு ஒன்றைக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல் பரப்புக்கு எடுத்து வந்த நீரைப் பிரித்துவிட்டு, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும்.

இதனால் வளம் கொழிக்கும் காவிரி பாசனப் பகுதியின் நிலங்களில் நீர் வளம் பாதிக்கப்படும். கடல்நீர் உட்புகும் ஆபத்து நேரும். விளை நிலங்கள் பாழாகி பயிர் சாகுபடி செய்ய முடியாத பேராபத்து உருவாகும். இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். சொந்த மண்ணிலேயே நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு ஏதிலிகளாக அலையும் கொடுமைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

வேளாண்மையை அழித்து பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பலி கொடுத்து, இந்திய அரசு ஹைட்ரோ கார்பன் மூலம் பல லட்சம் கோடிகளைக் குவிப்பதற்கும், பெரு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கும் தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களை வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளி கொடுமை புரிந்த வேதாந்தா குழுமத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்று 13 பேர் உயிரைப் பறித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு, என்ன துணிச்சலில் அதே வேதாந்தா குழுமம் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் பெற்றுள்ளதை அனுமதிக்கிறது?
தூத்துக்குடி போன்று காவிரி டெல்டாவிலும் மக்களை பலிவாங்கத் துடிக்கும் தப்புக் கணக்கை மத்திய, மாநில அரசுகள் போடக்கூடாது.

காவிரி தீரத்து மக்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் நிலத்தையும், வேளாண் தொழிலையும் மற்றும் காவிரி உரிமையையும் பாதுகாப்பதற்கு அணி அணியாக திரண்டு வருவார்கள்.

எனவே காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியை மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் கைவிட வேண்டும். இல்லையேல் மக்கள் போராட்டம் எரிமலைபோல் வெடிக்கும் என்று எச்சரிக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

தேர்தல் முடிந்து, மத்தியில் அடுத்து யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெரிய இன்னும் 10 நாட்கள் உள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிர்ப்புக்கிடையே அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் போன்ற பெரும் போராட்டங்கள் எந்த நேரமும் வெடிக்கும் என்பது உண்மை.

நீயா 2 படத்துக்காக வரலட்சுமி எடுத்த மிகப்பெரிய ரிஸ்க்..! மனம்திறந்த இயக்குநர்

You'r reading விடாது கருப்பு போல தமிழகத்தை காவு வாங்கும் வேதாந்தா... ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மீண்டும் வெடிக்கும் போராட்டம்..! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை