தமிழகத்தில் மே3 வரை ஊரடங்கு தளர்வு இல்லை.. அரசு அறிவிப்பு

curfew restrictions in tamilnadu cotinue till may 3.

by எஸ். எம். கணபதி, Apr 21, 2020, 10:35 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 457 பேர் குணமடைந்துள்ளனர். 17 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, ஏப்.20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்றும், இது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து ஆராய்வதற்கு நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


இந்த குழு நேற்று(ஏப்.20) முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை அளித்தது. இது பற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், வேலுமணி, ஜெயக்குமார், அன்பழகன், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்பு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:
கடந்த 15ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20ம் தேதிக்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன. அதனடிப்படையில், நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ள மே3ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் மே3 வரை ஊரடங்கு தளர்வு இல்லை.. அரசு அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை