நியூஸிலாந்தில் நீங்கள் வீடு வாங்க முடியாது - சட்டம் நிறைவேறியது

by SAM ASIR, Aug 20, 2018, 10:19 AM IST
நியூஸிலாந்தில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்ட திருத்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"நியூஸிலாந்தில் வெளிநாட்டவர் வீடுகளை வாங்குவதற்கு தடை விதிக்கப்படும்" என்பதை தேர்தல் வாக்குறுதியாக கூறியே தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்து, ஜெஸிந்தா ஆர்டர்ன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
 
இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் வாங்கப்பட்ட வீடுகளில் மூன்று சதவீதம் சீனர்கள், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மக்களால் வாங்கப்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மக்கள்தொகை அதிகமான ஆக்லாந்து நகரில் மேற்கூறப்பட்ட காலகட்டத்தில் ஆறு சதவீதம் வீடுகள் வெளிநாட்டவரால் வாங்கப்பட்டுள்ளது.
 
நூற்றுக்கு ஒருவர் என்ற கணக்கில் நியூஸிலாந்து குடிமக்கள் பல்லாயிரம் பேர் சொந்த வீடில்லாமல் தவித்து வருகின்றனர். வீடு வாங்கும் விஷயத்தில் நியூஸிலாந்து மக்களுக்கான வாய்ப்பை வெளிநாட்டவர் பறித்துவிடக்கூடாது என்று அரசு நினைப்பதாக இணை நிதியமைச்சர் டேவிட் பார்க்கர் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே வீடுகளை வாங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கு இந்தச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடன் நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்திருப்பதால் அந்நாட்டவர் வீடு வாங்க தடையேதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.

You'r reading நியூஸிலாந்தில் நீங்கள் வீடு வாங்க முடியாது - சட்டம் நிறைவேறியது Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை