ஆன்லைனில் மது விற்பனை.. அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை..

High court allows opening liquor shops in tamilnadu.

by எஸ். எம். கணபதி, May 7, 2020, 09:59 AM IST

தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க மறுத்து ஐகோர்ட், ஆன்லைன் மூலம் மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன.

இதற்கிடையே, மதுபானக் கடைகள் திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், ஊரடங்கால் டாஸ்மாக் மதுபானக்கடைகள் 40 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டதால் குடிப்பழக்கம் உடையவர்கள் அந்த தீங்கிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது மதுபானக் கடைகளை அரசே மீண்டும் திறப்பதால், கொரோனா வைரஸ் பரவுவது மேலும் அதிகரிக்கும். ஊரடங்கால் குறைந்திருக்கும் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்கும். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போன்று, பலரும் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் நேற்று வீடியோகான்பரன்ஸ் மூலம் விசாரித்தனர்.

தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகிக் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு, காலை 10 முதல் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், 3 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் மதுபாட்டில்கள் விற்கப்படும். எனவே, கூட்டநெரிசல் ஏற்படாது. சென்னை பெருநகரில் கொரோனா அதிகம் பாதித்துள்ளதால், மதுபானக் கடைள் திறக்கப்படவில்லை.
மதுபானக் கடைகள் திறப்பது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மதுபானக்கடைகள், ஏற்கனவே தமிழக அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தடை விதிக்க முடியாது. ஆனாலும் சில நிபந்தனைகளை விதிக்கிறோம். ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு புல் பாட்டில்களுக்கு மேல் விற்கக்கூடாது. மேலும் 3 நாள் இடைவெளி விட்டு வாரத்திற்கு 2 முறை மட்டுமே ஒருவருக்கு மதுபாட்டில் தர வேண்டும். இதற்காக மதுபாட்டில் வாங்குவோர் ஆதார் அட்டைகளைக் காண்பிக்க வேண்டும். மது விற்பனைக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
மேலும், பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அதிக விலைக்கு மது விற்பனை செய்வதையும், மொத்தமாக விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும். அதற்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி, மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, அந்த ரசீதுடன் டாஸ்மாக் கடைக்கு வருபவர்களுக்கு மேலும் 2 புல் பாட்டில்களை விற்பனை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த வரிசையின் அடிப்படையில் மது விற்பனை செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், அந்த மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You'r reading ஆன்லைனில் மது விற்பனை.. அரசுக்கு ஐகோர்ட் ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை