7 பேர் விடுதலை... ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை

Sep 10, 2018, 08:40 AM IST
உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்கள் ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
 
இவர்களது விடுதலைக்கு எதிரான மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
 
இதனை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடந்தது.  சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இந்த தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளுநர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார். 
 
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

You'r reading 7 பேர் விடுதலை... ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை