"இப்போதிருப்பவர் உன் அப்பா அல்ல" - எட்டு வயது படிக்கும் மனோஜிடம் அவனது அத்தை கூறியதும் அதிர்ந்து போனான். "நீ குட்டிப் பையனாக இருந்தபோது, உன் அப்பா விபத்தில் இறந்து போய்விட்டார். பிறகு உன் அம்மா இன்னொரு திருமணம் செய்து கொண்டாள். அதன் பின்பு தான் உன் தம்பி பிறந்தான். உன் தம்பிக்குதான் இவர் உண்மையான அப்பா" என்று விளக்கினார்கள் அத்தை.
"நீ வளர்ந்து விட்டாய். வேறு யாராவது சொல்லி தெரிவதை விட நானே சொல்லிவிடுவது நல்லது என்பதால் சொல்கிறேன்," அத்தை சமாதானம் கூறியும் மனதுக்குள் நொறுங்கி போனான் மனோஜ். அதன்பின் அவன் பிரமை பிடித்தவன் போல் இருந்தான்; படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை - இதுபோன்ற தகவல்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடும்.
மன அழுத்தம், மனதின் ஒரு நிலை - அதாவது மனப்பான்மையின் ஒரு வகைதான் மன அழுத்தம், டிப்ரஷன் எனப்படுகிறது. காரணமில்லாமல் அதிகப்படியான துக்கத்தை, தனிமையை ஒருவர் உணர்வதே பொதுவாக மன அழுத்தம் எனப்படுகிறது.
டிப்ரஷன் ஏற்பட காரணங்கள்
ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு காரணங்கள் என்ன என்பது இதுவரை உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு காரணிகள் மன அழுத்தத்தை உருவாக்குகின்றன.
தீவிரமான நோயின் தாக்கம் சிலருக்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், அன்பான ஒருவரின் பிரிவு அல்லது மறைவு சிலருடைய மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. சிறு வயதில் உடல்ரீதியாக அல்லது மனரீதியாக துன்புறுத்தப்படுதல், பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்படுதல் ஆகியவையும் வளர்ந்த பிறகு மன அழுத்தத்தை கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு பரம்பரை சொத்தாக மன அழுத்தம் வந்து சேர்கிறது.
வேலை மாற்றம், படிப்பை முடித்தல், ஏன் திருமணமான புதிதில் கூட மன அழுத்தம் ஏற்படுகிறதாம்.
மன அழுத்தமும் மனித உடலும்
மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மருத்துவ ரீதியான வித்தியாசங்கள் மூளையில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மூளையில் நினைவுகளை சேகரித்து வைக்கும் சிறுபகுதி ஹைபோகேம்பஸ் (hippocampus) எனப்படுகிறது. சாதாரணமான மனிதர்களின் ஹைபோகேம்பஸ் பகுதியை விட, மன அழுத்தம் கொண்டவர்களின் மூளையில் ஹைபோகேம்பஸ் குறுகியதாக காணப்படுகிறது.
ஹைபோகேம்பஸ் சிறிதாகும்போது, நரம்பியல் பரிமாற்ற வேதிப்பொருள்களுள் ஒன்றான செரோடோனினை (serotonin)பெற்றுக்கொள்ளக்கூடிய செல்களின் எண்ணிக்கை குறைகிறது. மூளையின் பல்வேறு பகுதிகளுக்கு உணர்வுகளை கடத்தும் பணியை செரோடோனின் செய்கிறது. கொரிஸ்டால் என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மன அழுத்தத்தை போக்குவதற்கான வழிகள்
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி, உங்கள் மூளை குணப்படுத்தி, இயல்பாக இயங்க வைக்கும். மேலும் எண்டோர்பைன், டோபாமைன், செரோடோனின் மற்றும் நோரெபைன்பிரைன் (norepinephrine - சந்தோஷத்தை தரக்கூடிய வேதிப்பொருள்) போன்ற வேதிப்பொருள்கள் அதிகமாக உருவாக காரணமாகிறது. அதன் காரணமாக உங்கள் மூளையின் செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படுகிறது; மனநிலை இயல்பாகிறது. ஆகவே, வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஆரோக்கியமான உணவு:
மனதில் அழுத்தத்தை உணர்கிற வேளையில், ஊட்டச்சத்து நிறைந்த ஆகாரங்களை உண்ண வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட புரதம் ஆகியவற்றை உண்ண வேண்டும். அதிகப்படியான சர்க்கரை, காஃபைன், மது, பால் பொருட்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் நல்ல முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது பலன் தரும். வைட்டமின் பி, வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 வகை சத்துகள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.
ஆழ்ந்த உறக்கம்:
மன அழுத்தத்தை ஆற்றக்கூடியது ஆழ்ந்த உறக்கம். மனம் மிகவும் சோர்ந்து போயுள்ளதாக உணர்கிறீர்களா? நன்கு தூங்கி எழுந்தால், மனம் லகுவாகும். ஆகவே, படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பே தொலைக்காட்சி, மொபைல் போன் ஆகியவற்றை பார்ப்பதை நிறுத்தி விடுங்கள்.
அவற்றிலிருந்து வரும் கதிர்கள், உறக்கத்தை தடுக்கும். படுக்கையறை போதுமான அளவு குளுமையாக இருக்கட்டும். படுக்கும் அறைக்குள் வெளிச்சம் வராமல் ஜன்னல் திரைகளை இழுத்து மூடிக்கொள்ளுங்கள். உறக்கம் வராமல் தவித்தால் நல்ல கதைப்புத்தகங்களை வாசிக்கலாம்.
படுத்த பிறகு இருபது நிமிடங்கள் கழித்தும் உறக்கம் வரவில்லையெனில், உடலை நீவி விடுங்கள்; கதைப் புத்தகம் வாசியுங்கள்; தியானம் செய்யுங்கள்; ஆழ்ந்து இழுத்து மூச்சு விடுங்கள். திரும்பவும் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
சூரிய ஒளி:
பகல் பொழுதில் உடலில் சூரிய ஒளி படுவதற்கு அனுமதித்தல் மன அழுத்தத்தை போக்கும். மன அழுத்தத்திற்கு வெயில் ஓர் இயற்கை நிவாரணி. மூளை செயல்பாட்டை தூண்டுவதோடு, சூரிய ஒளியில் வைட்டமின் டி சத்து உள்ளது. உடலில் ஹார்மோன்களையும் அது ஒழுங்குபடுத்தும்.
மற்றவர்களோடு நேரம் செலவழியுங்கள்:
சமுதாயத்தில் மற்றவர்களோடு பழகுவது, உரையாடுவது மன அழுத்தத்தைத பெருமளவு குறைக்கும். எந்நேரமும் அறைக்குள் அமர்ந்து தொலைக்காட்சியை, மொபைல் போனை பார்த்துக் கொண்டிருப்பதை விட, நண்பர்கள், உறவினர்களை சென்று பாருங்கள். சிரிக்க வைக்கும் இயல்பு கொண்டவர்களை சந்திப்பது சிறப்பு. மனம் விட்டு சிரிக்கும்போது மன அழுத்தம் காணாமல் போகும். உங்கள்மீது அக்கறை கொண்டவர்களை சந்தியுங்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்ளும்போது மனம் லகுவாகும்.
விருப்பமான பொழுதுபோக்குகள்:
உங்கள் மனம் எதை விரும்புகிறதோ அதில் ஈடுபடுங்கள். கிடார், டிரம்ஸ் வாசிக்கலாம். கதைகள், துணுக்குகளை எழுதலாம். விருப்பமான விளையாட்டுகளை விளையாடலாம், இசை கேட்கலாம். உங்கள் மனம் எதை அதிகம் நாடுகிறதோ அதைச் செய்வீர்களானால் மன அழுத்தம் மாறும்.
துடிப்பாக இருங்கள்:
"தனிமை, அதைரியம், அதிருப்தி இவற்றிற்கு நல்ல மருந்து கடின உழைப்புதான்" என்று ஒரு கூற்று உண்டு. ஆகவே, வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யுங்கள். ஓய்வாக அமர்ந்திருந்தால், யோசனைகள் வந்து மனதை குழப்பும்; மன அழுத்தம் அதிகமாகும். பரபரப்பாக செய்யுமளவுக்கு அதிக வேலைகளை வைத்துக்கொள்ளுங்கள். வேலையில் முழு கவனமும் சென்று விட்டால், மன அழுத்தமும் மறந்து போகும்.
மருத்துவரின் ஆலோசனை
இயற்கையாக இந்த வழிகளில் மன அழுத்தத்தை மாற்றிக்கொள்ளலாம் என்ற போதிலும், சில வகை மன அழுத்தங்களுக்கு மருத்துவ கண்காணிப்பு அவசியம். இந்த முறைகளையெல்லாம் சரியாக பின்பற்றியும் மன அழுத்தம் நீங்காமல் இருந்தால், மருத்துவரை சந்தியுங்கள். அவர் சிகிச்சை மூலம் மன அழுத்தத்தை போக்குவார்.