பேனர், கட் அவுட் வேண்டாம்.. அரசியல் கட்சிகள் அலறல்

Tamilnadu political leaders issued statements against banners and cutouts

by எஸ். எம். கணபதி, Sep 14, 2019, 09:05 AM IST

அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, பேனர்கள் வைப்பவர்களை ஐகோர்ட் கடுமையாக கண்டித்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்களும் இனிமேல் கட்அவுட் பேனர்களே வைக்கக் கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவுக்கு வரும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையில் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்து, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக, திமுக, அமமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், இனிமேல் கட்சிக்காரர்கள் யாரும் பேனர் வைக்கவே கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற பெயரிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்களை அன்புகூர்ந்து நிறுத்திட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கட்சியினர் ஈடுபடவே கூடாது.

ஒரு சிலர் ஆர்வம் மிகுதியாலும் விளைவுகளை அறியாமலும நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வரும் போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம். எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் கட்அவுட்டுகள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை வருமாறு:

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று கழக நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் - மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.

ஆகவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், பதாகைகள் இல்லாத விழாக்கள்தான் அரசியல் முதிர்சசியின் அடையாளம். பதாகை தவிர்ப்போம், நாகரீகம் காப்போம். பதாகை அமைத்தவர்களிடம் அபராதம் வசூலித்த பாமகவுக்கு மட்டுமே இதைச் சொல்ல உரிமை உண்டு. நான் தூத்துக்குடி சென்ற போது, அங்கு என்னை வரவேற்க ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்ததும், அவற்றை அகற்றச் சொல்லி விட்டுத்தான் விழாவில் பங்கேற்றேன். அதே போல், புதுச்சேரியில் பதாகைகள் வைத்த பாமக கட்சியினரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சியினர் மற்ற அமைப்பினர், தனிநபர்கள் என யாரும் மக்களுக்கு இடையூறு மற்றும் இன்னல் ஏற்படுத்தும் கட் அவுட், பேனர்களை வைக்காமல் தவிர்க்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் இதற்கு பொறுப்பான அதிகாரிகள், இவற்றை வைப்பதை தடுக்க வேண்டும். சுபஸ்ரீ மீது மோதிய லாரி கண்மூடித்தனமான வேகத்தில் வந்ததும் அவரது மரணத்திற்கு ஒரு காரணம். எனவே, போக்குவரத்து போலீசார், கனரக வாகனங்களில் வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போல், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட மற்ற கட்சிகளின் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

You'r reading பேனர், கட் அவுட் வேண்டாம்.. அரசியல் கட்சிகள் அலறல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை