பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள்.. இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? மத்திய அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்

Ramadoss condemns centre on Public Sector Jobs for Tamils

by Mathivanan, Dec 14, 2018, 11:27 AM IST

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:


தமிழ்நாட்டில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க வட இந்தியர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் எழுப்பப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 11-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணியாளர்களும், அதிகாரிகளும் கடந்த 2003-ஆம் ஆண்டு வரை முழுக்க முழுக்க தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டிற்கு பிறகு வட இந்தியர் படிப்படியாக உள்ளே திணிக்கப்பட்டனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டு வரை சென்னை பெட்ரோலிய நிறுவனம் நேரடியாக ஆட்களைத் தேர்வு செய்து வந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ஆள்தேர்வுக்கான போட்டித்தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் எப்படி 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனரோ, அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுனர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் நிலைக்கு கீழ் உள்ள பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என்பது மரபாகும். ஆனால், மரபை உடைத்து வட மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

சென்னை பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சென்னை துறைமுகத்திலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக குழாய்ப் பாதை அமைக்கப்பட்டது. அதற்கு கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குழாய்ப்பாதை அமைக்க ஒத்துழைத்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சென்னை பெட்ரோலிய நிறுவனம் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றாமல் வட இந்தியர்களை பணியில் திணிக்கும் முயற்சியில் நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. தெற்கு ரயில்வே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், பெல் நிறுவனம் உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் இதே நிலை தான் நிலவுகிறது. பிகார், உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்கள் மற்றும் ஒதிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் அதை அமைப்பதற்கான நிலங்களை தமிழக மக்களோ, அரசோ தான் கொடுத்திருப்பார்கள். தொடக்கக்காலத்தில் இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு அவர்கள் தான் கடுமையாக உழைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் செய்து விட்டு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆட்சியாளர்களின் துணையுடன் பணியில் அமர்த்தப் பட்டால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியாவின் அங்கம் தானா... இல்லையா? என்ற வினா எழுகிறது. இந்த வினாவுக்கு மத்திய அரசு அதன் சமூகநீதி செயல்பாடுகளால் பதிலளிக்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 75 விழுக்காடும், அதற்கு கீழ் உள்ள பணிகளில் 100 விழுக்காடும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடாக வழங்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்தால், இந்த சமூக அநீதியைக் கண்டித்து சென்னை பெட்ரோலிய நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

You'r reading பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள்.. இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? மத்திய அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை