பாஜகவை காஷ்மீரில் கால் பதிக்கவிட்டது யார்? உமர்-மெகபூபா இடையே நீயா? நானா? மோதலால் பரபரப்பு

Who allowed BJP to Kashmir first, Omar Abdullah and Mehbooba Mufti argued in detention camp

by Nagaraj, Aug 12, 2019, 13:26 PM IST

காஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா? நானா? என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது. காஷ்மீர் மசோதா தாக்கலுக்கு முன், சிறைபிடிக்கப்பட்டு அரசு பங்களாவில் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவரும் பகிரங்கமாக வாக்குவாதம் செய்ததால் வேறு வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யவும், அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும், மத்திய அரசு கடந்த வாரம் அதிரடி முடிவு எடுத்தது.இந்த முடிவை மேற்கொள்ளும் முன், காஷ்மீரில் ராணுவத்தினரை பெருமளவில் குவித்தது மத்திய அரசு .முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை சிறைப்பிடித்தது ஜம்மு - காஷ்மீர் அரசு.

இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட தலைவர்கள் அனைவரையும் ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸ் என்னும் அரசு பங்களாவில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த பங்களாவில் தான் தீவிரவாதிகள் உள்ளிட்ட காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவர்களை அடைத்து வைத்து விசாரணை நடத்துவது வழக்கம்.

காஷ்மீர் மசோதா காரணமாக, முன் எச்சரிக்கையாக கடந்த வாரம் இந்த அரசு பங்களாவில் சிறை வைக்கப்பட்டிருந்த தலைவர்களுக்கு சிறையில் வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பங்களாவில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா கீழ்த்தளத்திலும், மெகபூபா முப்தி முதல் தளத்திலும் தங்க வைக்கப்பட்டிருந்தனராம்.

இந்நிலையில் காஷ்மீர் மசோதா குறித்தும், பாஜகவின் நடவடிக்கைகள் குறித்தும் உமர் அப்துல்லாவுக்கும் மெகபூபாவுக்கும் இடையே திடீரென நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் பாஜகவுடன் 2015 முதல் 2018 வரை நீங்களும், உங்கள் தந்தை முப்தி முகமது சயீத்தும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்ததாலேயே அக் கட்சி மாநிலத்தில் காலூன்ற உதவி விட்டதாக மகபூபாவை, உமர் அப்துல்லா குற்றம் சுமத்தினாராம். பதிலுக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அந்த கட்சியுடன் உங்கள் தந்தை கூட்டணி வைத்ததையும், மத்திய அமைச்சராக நீங்கள் இருந்ததையும் மறந்து விட்டீர்களா? என்று உமரை ஏகத்துக்கும் மெகபூபா விமர்சித்தாராம். அது மட்டுமின்றி காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தவறான முடிவை எடுக்க காரணமாக இருந்ததே உங்கள் தாத்தா ஷேக் அப்துல்லா தானே? என்றும் உரக்க கூச்ச விட்டாராம்.

இதனால் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் முன்னிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பாகி விட்டதாம். இதைத் தொடர்ந்து இருவரும் வேறு, வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அங்கு பணியில் இருந்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போன்றுதான் முத்தலாக் தடை மசோதா நிறைவேறிய போதும் இருவரும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு டிவிட்டரில் மோதிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது காஷ்மீர் மசோதா விவகாரத்திலும் இருவரும் பலர் முன்னிலையில் வாக்குவாதம் செய்து மோதிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

You'r reading பாஜகவை காஷ்மீரில் கால் பதிக்கவிட்டது யார்? உமர்-மெகபூபா இடையே நீயா? நானா? மோதலால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை