குற்றாலத்தில் சாரல் தொடங்கியாச்சி.. குதூகல குளியலுக்கு தயாரா?

Season in courtallam starts, moderate water flow in falls:

by Nagaraj, Jun 11, 2019, 10:32 AM IST

குற்றாலத்தில் சீசன் லேட்டாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய ஓரிரு நாளிலேயே சீசன் களைகட்டத் தொடங்க் யுள்ளது. அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் குற்றாலப் பிரியர்கள் இப்போதே டூர் பிளானுக்கு தயாராகி வருகின்றனர்.

ஓ..வென்று கொட்டும் அருவிகளின் நீர்ச்சத்தம்...குளு குளு காற்று...அவ்வப்போது நனைக்கும் சாரல்... எதிர்பாராது வரும் கனமழை...திடீர், திடீரென தலை காட்டி மறையும் சூரியன்... என மாறுபட்ட சீதோஷ்ண நிலையில், சுற்றுலாப் பிரியர்களை சுண்டியிழுப்பது தான் குற்றாலம் . பொதிகை மலைச்சாரலில் அமைந்துள்ள ரம்மியமான பகுதியில், அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளித்து கும்மாளம் போடுவதே தனி சுகம் தான். குற்றாலத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உள்ளனர்.

வழக்கமாக மே இறுதியில் சீசன் லேசாகத் தொடங்கி ஜுனில் களை கட்டி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத மத்தியில் வரை உச்சகட்ட சீசன் என குற்றாலம் 3 மாதங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். இந்த ஆண்டு கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தாமதமானதால், குற்றாலம் அருவிகளும் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை வறண்டு காணப்பட்டன.

இரண்டு நாட்களாக பருவ மழை தீவிரமாகி குற்றாலம் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர் மழையால் நேற்று முன்தினம் ஐந்தருவியில் தண்ணீர் தலைகாட்டத் தொடங்கியது. மெயின் அருவியிலும் நேற்று மாலை முதல் தண்ணீர் விழ ஆரம்பிக்க, சீசனும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. இதே சீசன் நிலவும் பட்சத்தில், அடுத்த சில நாட்களில் அருவிகளில் நிரந்தரமாக தண்ணீர் கொட்ட ஆரம்பித்து சீசனும் களைகட்டி விடும்.

இதனால் குற்றாலம் உற்சாக, உல்லாசக் குளியலுக்காக வருடம் தோறும் படையெடுக்கும் சுற்றுலாப் பிரியர்கள் இப்போதே டூர் பிளான் போடத் தயாராகி விட்டனர். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி / புலியருவி என குற்றாலத்தில் அருவிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், குற்றாலத்தைச் சுற்றிலும் ஏராளமான அருவிகள், அணைகள் என சுற்றிப் பார்க்கவும், ஆனந்தக் குளியல் போடவும் சுற்றுலாப் பகுதிகள் பெருகிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You'r reading குற்றாலத்தில் சாரல் தொடங்கியாச்சி.. குதூகல குளியலுக்கு தயாரா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை