ஃபேஸ்புக், டுவிட்டர் சிங்கமா நீங்கள்? - அமெரிக்க விசா மறுக்கப்படலாம்!

by SAM ASIR, Jul 30, 2018, 18:54 PM IST
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஒருவர் செய்யும் பதிவின் அடிப்படையில் பல்வேறு நாடுகள், விசா வழங்க மறுத்து வருகின்றன.
விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபரின் சமூக வலைத்தள கணக்குகளை பல நாடுகளின் குடியேறுதல் மற்றும் குடிபுகல் அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தீவிரவாத குழுக்களில் உறுப்பினராக இருக்கிறாரா? தங்கள் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறாக வெறுப்புணர்ச்சி கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளாரா என்றெல்லாம் குடிபுகல் அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
 
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் உங்கள் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆய்வு செய்யவும் அலுவலர்களுக்கு அதிகாரம் உண்டு. 2015-ம் ஆண்டு 8,500 பேரின் மின்னணு சாதனங்களையே அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர். 2017-ம் ஆண்டு 30,200 சாதனங்களையும், 2018 நிதியாண்டில் மார்ச் 31-ம் தேதி வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் 15,000 சாதனங்களையும் ஆய்வு செய்துள்ளனர்.
 
அமெரிக்காவுக்குள் நுழையும்போது அல்லது வெளியேறும்போது அதிகாரிகள் உங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்களை ஆய்வு செய்யக்கூடும். தற்போது நடைமுறையிலுள்ள அமெரிக்க சட்டங்களின்படி, குடிபுகுபவரின் கையிலுள்ள செல்போன் மற்றும் லேப்டாப்களிலுள்ள தகவல்களை மட்டுமே அலுவலகர்கள் ஆய்வு செய்ய முடியும். சந்தேகப்பட்டால், சாதனங்களை தடயவியல் சோதனைக்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் உண்டு. வேறு வகையில் அதாவது க்ளவுட் (cloud) முறையில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை அவர்களால் பார்வையிட முடியாது என்று சர்வதேச சட்ட மையம் ஒன்று கூறியுள்ளது.
 
நேர்மையான நடைமுறை என்ற கொள்கையின்படி, விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்கில் முறையற்ற பதிவுகள் இருப்பதும் அவர்களுக்கு விசா மறுக்கப்பட காரணமாகலாம். விண்ணப்பத்தில் வாழ்க்கை துணை என்று குறிப்பிட்டிருப்பவரை தவிர மற்றவருடன் இருக்கும் புகைப்படங்கள், விண்ணப்பதாரரின் சமூகவலைத்தள பதிவில் இருந்தால், அதைக் குறித்த விளக்கங்களை கூட குடியேறும் நாட்டு அதிகாரிகள் கேட்க முடியும். விசா, பணி அனுமதி மற்றும் குடிபெயர்தல் ஆகியவற்றுக்காக விண்ணப்பித்திருப்போர், தங்கள் சமூகவலைத்தள கணக்குகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்று அறிந்திருக்க வேண்டும்.
 
நாடுகளும், நடைமுறைகளும்
அமெரிக்கா: 2015-ம் ஆண்டில் 8,500; 2017-ம் நிதியாண்டிலோ 30,000க்கும் அதிகமான மின்னணு சாதனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
 
கனடா, நியூஸிலாந்து: விண்ணப்பதாரரின் சமூக வலைத்தள பதிவுகளை ஆய்வு செய்யலாம்
 
ஆஸ்திரேலியா: விண்ணப்பதாரர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருத்துகளை விசா வழங்கும் / மறுக்கும் நடைமுறைக்கு ஆதாரமாக கொள்ளலாம்.
 
ஐரோப்பிய ஒன்றியம்: தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு தருபவரா என்ற சோதனை உண்டு
இதுபோன்ற நடைமுறைகள் குறித்து தகுந்த விழிப்புணர்வை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அளிப்பது முன்னேற்பாடாக இருக்க உதவும். செல்போன், லேப்டாப் போன்றவற்றில் உள்ள விவரங்களை, க்ளவுட் முறையில் சேமித்துக் கொள்ளலாம்.
 
நீண்ட தூர விமான பயணத்திற்கு பிறகு பின்னிரவு நேரங்களில் கூட குடிபுகல் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்வதோடு, செல்போன், லேப்டாப் போன்றவற்றை சோதிக்கும்போது ஒத்துழைப்பதும் நாம் தடுக்கப்படாமல் இருக்க வழிவகுக்கும்.

You'r reading ஃபேஸ்புக், டுவிட்டர் சிங்கமா நீங்கள்? - அமெரிக்க விசா மறுக்கப்படலாம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை