காங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல்? விளக்கம் கேட்கிறது கப்பல் துறை

D.G. of Shipping, issued show cause notice to k.s.alagiri on allegations against his college

by எஸ். எம். கணபதி, Aug 19, 2019, 13:35 PM IST

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நடத்தும் கல்லூரியில், மாணவர்களுக்கு பயிற்சி தராமலேயே பல கோடி ரூபாய் வசூலித்ததாக புகார் போயிருக்கிறது. இந்த புகாருக்கு விளக்கம் கேட்டு அவருக்கு இந்திய கப்பல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த திருநாவுக்கரசர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மாற்றப்பட்டார். புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். வழக்கம் போல், அழகிரி தலைவரானதும் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஒரு புதிய கோஷ்டி உருவானது. அந்த கோஷ்டிக்கு எதிராக திருநாவுக்கரசர் கோஷ்டியும், மற்ற கோஷ்டிகளும் வரிந்து கட்டத் தொடங்கினர். ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதால், அழகிரியை அசைக்க முடியவில்லை.

இந்நிலையில், அழகிரி நடத்தும் ஷிப்பிங் கல்லூரியில் மோசடிகள் நடப்பதாகவும், இது தொடர்பாக மத்திய கப்பல் துறை, அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதை காங்கிரசில் உள்ள அவரது எதிர்கோஷ்டிகள்தான் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

அந்த புகார் என்னவென்ற பற்றி விசாரித்தோம். சிதம்பரத்தில், கமலம் சம்பந்தம் அழகிரி எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் கடல்சார் அறிவியல் மற்றும் பொறியியல் நிலையம் என்ற கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இதன் டிரஸ்டிகளாக கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.சௌந்தரபாண்டியன், கே.எஸ்.ஏ.வத்சலா, கே.எஸ்.ஏ.சாந்தி, ஏ.அனுசுயா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த கல்லூரியில் கப்பல் தொழில் நுட்பம் தொடர்பான படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

கப்பல் தொழில் நுட்பம் தொடர்பாக 6 மாத கால பயிற்சி அளிப்பதாக கூறி, 720 மாணவர்களிடம் ரூ.42 கோடி வசூலிக்கப்பட்டதாகவும், ஆனால் ஒரு நாள் மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் புகார் போயிருக்கிறது. அலவாலா விஷ்ணு வர்தன் என்பவர் கடந்த ஜூன் மாதமே இந்த புகாரை, இந்திய கப்பல் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அதில் தங்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்காமல், சான்றிதழை மட்டும் கொடுத்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்த புகார் தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு, மும்பையில் உள்ள இந்திய கப்பல் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், ‘‘எனது கல்லூரியில் ரொம்ப ஸ்ட்ரிக்டாக இருப்போம். சில மாணவர்கள் வெளியே போய் விட்டு வரும் போது, ஹான்ஸ் போட்டுக் கொண்டு வருவார்கள். சிலர் மதுபானம் குடித்து விட்டு வருவார்கள். நாங்கள் உடனே அவர்களின் பெற்றோரை அழைத்து பேசி, கடுமையாக நடவடிக்கை எடுப்போம். அதனால், யாராவது இப்படி எங்கள் மீது புகார் கொடுத்திருப்பார்கள். அதே போல், எங்கள் கல்லூரி சிறப்பாக செயல்படுவதால், மற்ற கல்லூரிகளுக்கு எங்கள் மேல் பொறாமை இருக்கும். அந்த தொழில் போட்டியில் புகார்கள் கொடுப்பார்கள். அந்த மாதிரி புகார்களில் நோட்டீஸ் வந்தால், நாங்கள் அதற்கு சரியான பதிலை கொடுத்து விடுவோம். இது ஒரு பெரிய விஷயம் அல்ல’’ என்று கூறியிருக்கிறார்.

வேலூரில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது; கடைசி நாளில் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

You'r reading காங்கிரஸ் தலைவர் கல்லூரியில் பயிற்சி தராமல் பல கோடி வசூல்? விளக்கம் கேட்கிறது கப்பல் துறை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை