டோல் பிளாசாவில் தகராறு துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய பாஜக எம்.பி.யின் பாதுகாவலர்

BJP MP Ram Shankar Katherias bodyguards thrash toll plaza staff in Agra

by எஸ். எம். கணபதி, Jul 6, 2019, 12:57 PM IST

கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரித்தும், பா.ஜ.க.வின் முக்கிய புள்ளிகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். ஆக்ரா எம்.பி.யின் பாதுகாவலர், டோல்பிளாசாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளை பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்கியா தாக்கினார். இவர், பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன். அந்த சம்பவத்தின் போது ஒரு அதிகாரியை இவர் கிரிக்கெட் பேட்டால் விரட்டி, விரட்டி அடித்ததை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து விட்டனர். பின்னர் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது.

இதன்பின்னர், கைது செய்யப்பட்ட ஆகாஷ் விஜய்வர்கியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பெரிய மாலை போட்டு தடபுடலாக வரவேற்பு கொடுத்தார்கள். ஆகாஷ் பேட்டியளிக்கும் போது தான் செய்தது சரி என்று பேசினார். இது பா.ஜ.க. தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி எச்சரித்தார். அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கடுமையாக எச்சரித்தார்.

ஆனால், ஒருவாரத்திற்குள் அடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா மக்களவை தொகுதி எம்.பி.யான ராம்சங்கர் கத்தாரியா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் 2 முறை வென்றவர். இவர் ஜூலை 6ம் தேதி அதிகாலையில் டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தனது மனைவியுடன் காரில் வந்தார். அதிகாலை 3 மணியளவில் அந்த கார் ரேகான்காலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில்(டோல் பிளாசா), வரிசையை விட்டு தனியாக முன்னேறிச் செல்ல முயன்றது.

அப்போது டோல் பிளாசா ஊழியர்கள் வந்து, காரை வரிசையில் ஓட்டி வருமாறு டிரைவரிடம் கூறினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. காரில் இருந்து எம்.பி.யின் பாதுகாவலர் இறங்கி வந்து டோல் பிளாசா ஊழியர்களை சரமாரியாக அடித்தார். திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார். துப்பாக்கியில் இருந்து தீப்பொறியுடன் குண்டு வெளியேறியது.

இந்த காட்சிகள், அந்த டோல் பிளாசாவின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. எம்.பி.யின் கார் சென்ற சிறிது நேரத்தில் இந்த வீடியோ காட்சியை சமூக ஊடகங்களில் பரப்பி விட்டனர். இதையடுத்து, ‘‘பிரதமர் எச்சரித்து நான்கு நாட்களாகவில்லை. அதற்குள் பா.ஜ.க.வின் எம்.பி.யின் ஆட்கள் டோல் பிளாசாவில் தகராறு செய்து துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்களே, இவ்வளவுதான் பா.ஜ.க.வில் கட்டுப்பாடா?’’ என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது அந்த எம்.பி.க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்காதீர்...!

You'r reading டோல் பிளாசாவில் தகராறு துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய பாஜக எம்.பி.யின் பாதுகாவலர் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை