பாலாற்றில் தடுப்பணை கட்ட தடை எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

Stalin requests Edappadi to take steps to stop the andra governments checkdams in palar

by எஸ். எம். கணபதி, Jul 24, 2019, 13:10 PM IST

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணிக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே 40 அடி உயரத்திற்கு 22 தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருவதை, அ.தி.மு.க அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து மாவட்டங்களை, குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீரின்றி, வறட்சிப் பிரதேசங்களாக மாற்றும் ஆபத்து நிறைந்த இந்த தடுப்பணைகளை, பொதுப்பணித் துறையை வைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் கண்டு கொள்ளாமல், கனவுலகில் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பது, கவலையளிக்கிறது. இந்தப் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க ஆந்திர அரசு நினைத்த போதே தடுத்தும், பிறகு அ.தி.மு.க ஆட்சியில் 12 அடி மற்றும் 20 அடி உயரம் வரை கட்டப்பட்ட போது கடுமையாக எதிர்த்தும் வந்திருக்கிறது திமுக.

தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆந்திர அரசின் தடுப்பணைகள் கட்டும் பணிகளை தடுக்க வலியுறுத்தி கடந்த 19.7.2016 அன்றே, வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறேன். அப்போது, அ.தி.மு.க அரசு, ஆந்திர மாநில அரசின் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு தடையாணை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால் இன்று வரை தடையுத்தரவு பெற முடியாமல், முதலமைச்சர் அடிக்கடி சிலாகித்துப் பெருமை பேசிக்கொள்ளும் “சட்டப்போராட்டத்தில்” படு தோல்வியடைந்து நிற்கிறது.

ஆகவே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரங்கள், வேளாண்மை, குடிநீர்த் தேவை ஆகியவற்றை மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கும் இந்த 40 அடி உயர தடுப்பணைகள் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தவும், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பாலாறு வழக்கில் ஆந்திர மாநில அரசுக்கு எதிராக அவசர தடையுத்தரவு பெற்றிடவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading பாலாற்றில் தடுப்பணை கட்ட தடை எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை