தமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்னை என மாயை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடியும் தமாஷ்

Water crisis is not in whole Tamil Nadu, cm edappadi Palani Samy

by Nagaraj, Jun 18, 2019, 22:31 PM IST

ஒரு சில இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்னையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. மக்கள் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கின்ற சூழல் உருவாகியுள்ளது.தலைநகர் சென்னையிலோ தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் பல மூடப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் வீடுகளை காலி செய்து சொந்த ஊர்ப் பக்கம் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்புவதையும் காண முடிகிறது.

இப்படி தண்ணீர் பிரச்சினை தாண்டவமாடும் சூழலில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ, தண்ணீர் பிரச்னை என்று வதந்தியை கிளப்புகிறார்கள் என்று தமாஷ் செய்தது சர்ச்சையானது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சில இடங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தமிழகம் முழுவதும் இருப்பது போல ஒரு மாயையை உண்டாக்குகிறார்கள் என்று அசால்ட்டாக கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எடப்பாடி பழனிச்சாமி தண்ணீர் பிரச்சினை குறித்து கூறியதாவது: இயற்கை பொய்த்துவிட்டது. பருவமழையும் போதிய அளவுக்கு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தேவையான அளவு குடிநீர் வழங்க அரசுத் தரப்பில் தீவிர நடவடிக்கை மே ள்ளப் பட்டு வருகிறது . ஓரிரு இடங்களில் இருக்கும் தண்ணீர் பிரச்சினையை வைத்து தமிழகம் முழுவதும் இருப்பது போல மாயை ஏற்படுத்த வேண்டாம். இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துத்தான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஆக மொத்தத்தில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினை தீரும். அதனால் இன்னும் 3 ,4 மாத காலத்துக்கு மக்கள் பொறுமையுடன் பிரச்சினையை சமாளித்துத் தான் ஆக வேண்டும் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

You'r reading தமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்னை என மாயை ஏற்படுத்த வேண்டாம் - முதல்வர் எடப்பாடியும் தமாஷ் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை