அஞ்சல் தேர்வில் தமிழ் நீக்கம் சட்டசபையில் காரசார விவாதம்

dmk walks out in assembly on the issue of Centre drops Tamil in postal jobs test

by எஸ். எம். கணபதி, Jul 15, 2019, 15:43 PM IST

அஞ்சல் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட்டது குறித்த பிரச்னையில் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அஞ்சல் துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இது வரை அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுத வாய்ப்பு தரப்பட்டு வந்தது. ஆனால், நேற்றைய தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அஞ்சல் துறை பணியிடங்களுக்கான தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால், விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார். ‘‘மத்தியில் பாஜக அரசு வந்த பின்புதான், விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் வேலையில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது. தபால் துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘இருமொழிக் கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு, இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது. இது குறித்து நீங்கள் மக்களவையில் குரல் கொடுங்கள், நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்’’ என்றார்.

இதை ஆமோதிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசினார். ஆனால், திமுகவினர் வெளிநடப்பு செய்வதற்காகவே இந்த பிரச்னையை எழுப்புவதாக கூறினார். மேலும், மத்திய அரசை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்ற அரசுதரப்பில் சம்மதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினால், நாங்களும் அதே நிலைபாட்டில்தான் இருக்கிறோம் என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால், மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் கூட நிறைவேற்ற மாட்டார்கள். இதைச் சொன்னால், எங்கள் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அதனால் வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.

அதே சமயம், சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ‘‘மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று அறிந்த பின்பு, அடுத்தக் கட்ட முடிவெடுக்கலாம் என்றுதான் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தீர்மானம் நிறைவேற்ற முடியாது அவர் சொல்லவில்லை. திமுகவினரால் ஒரு 24 மணி நேரம் பொறுத்துக் கொள்ள முடியாதா? எதற்கெடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள். மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் ஏதாவது பிரச்னையை ஏற்படுத்தி, அதில் குளிர்காய முடியாதா என்று பார்க்கிறார்கள், ஆனால், அவர்கள் நினைப்பது பலிக்காது என்றார்.

You'r reading அஞ்சல் தேர்வில் தமிழ் நீக்கம் சட்டசபையில் காரசார விவாதம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை