கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் - நாளை தீர்ப்பு

Karnataka political crisis, SC adjourned judgement tomorrow on rebel MLAs resignation Matter:

by Nagaraj, Jul 16, 2019, 21:12 PM IST

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் சரியாக இருக்கும் போது, சபாநாயகர் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வி எழுப்பினார். பரபரப்பான இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் மற்றும் மதக்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் இவர்களின் ராஜினாமா கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. ராஜினாமா முறைப்படி வழங்கப்படவில்லை என்று சபாநாயகர் கூறிவிட்டார். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இந்த ராஜினாமா குறித்து சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். சபாநாயகரோ, உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனவும் கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்து விட்டார். இதனால் இன்று காலை எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்தோ, அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்தோ சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என கடந்த 12-ந் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஒருவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும். அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமா பற்றி முடிவு எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்தி வருகிறார். உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகரை உச்ச நீதிமன்றம் வற்புறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தம்மால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகருக்கு உத்தரவிட்டு முடிவு எடுக்கக் கோரி நிர்பந்திக்க என்னால் முடியாது.சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது' என தெரிவித்தார்.

அப்போது, சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
இதற்கு தலைமை நீதிபதியோ, கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சபாநாயகருக்கு உத்தரவிட்ட போது நீங்கள் மகிழ்ச்சியாக சென்றீர்கள். இடைக்கால சபாநாயகரை நியமித்து 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது இதே உச்சநீதிமன்றம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார்.

ராஜினாமா கடிதம் சரியாக இருக்கிறது, பிறகு ஏன் சபாநாயகர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அரசியல் சாசன அதிகாரங்களை எங்களுக்கு நினைவுபடுத்தும் சபாநாயகர் அதனை ஏன் பின்பற்றாமல் இருக்கிறார்? என்றார். இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் இடையே காரசார வாக்குவாதம் தொடர்ந்ததால் பிற்பகலிலும் விசாரணை தொடர்ந்தது. அப்போது எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நாளை மறுதினம் கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை வழங்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் - நாளை தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை