போட்டோக்களை அழிக்கும் வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் செயலியின் புதிய மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. படங்கள் உள்ளிட்ட ஊடக கோப்புகள் (மீடியா ஃபைல்) இக்குறைபாடு காரணமாக அழிக்கப்படுவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆண்ட்ராய்டு இயங்குதள மொபைல் போன்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் 2.19.66 என்ற மேம்படுத்தப்பட்ட வடிவத்தை நிறுவிய பீட்டா பயனர்கள், சாட் என்னும் வாட்ஸ்அப் உரையாடலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட புகைப்படங்கள் செயலியிலிருந்து அழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். குழு உரையாடல்களுக்கான சேமிப்பகத்தில் (gallery) அப்புகைப்படங்கள் இருப்பதே சற்று ஆறுதலான விஷயம்.
 
2.19.66 என்ற புதிய வடிவத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் ஏதும் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட பயனர்கள் இதை தரவிறக்கம் செய்வது குறித்து ட்விட்டரில் மற்றவர்கள் எச்சரிப்பதோடு புகாரும் அனுப்பியுள்ளனர்.
 
வேறு சில பயனர்கள், ஸ்டேட்டஸ் என்னும் நிலைத்தகவலை பார்ப்பதில் பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப் நிலைத்தகவல்கள் பார்க்க இயலாமல் நிழல்படிந்து (grey) இருப்பதால், தங்கள் நண்பர்கள், தங்களை தடை (பிளாக்) செய்திருப்பார்களோ என்ற தேவையற்ற சந்தேகம் பயனர்களிடம் எழும்ப இக்குறைபாடு காரணமாகிறது.
 
ஐஓஎஸ் இயங்குதளத்தை உபயோகிக்கும் பயனர்கள், வாட்ஸ்அப் கணக்கிற்கு தங்கள் முகத்தை கடவுச் சொல்லாக (face ID)பயன்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒருவரின் போனை தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வேறொருவர் பயன்படுத்தும்போது, வாட்ஸ்அப் உரையாடல்களை புதிய பயனர் பார்ப்பதை தடுக்க இது உதவுகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இவ்வசதி வரும் என்று கூறப்படுகிறது.
 
 
 
 
Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email