ஜம்மு காஷ்மீர், லடாக்கில் 50 ஆயிரம் பேருக்கு வேலை மத்திய அரசு திட்டம்

Centre working on new plan to create 50,000 jobs in Jammu and Kashmir

by எஸ். எம். கணபதி, Aug 28, 2019, 10:52 AM IST

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்து துணை ராணுவத்திற்கு 50 ஆயிரம் இளைஞர்களை தேர்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ஆக.5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், சுமார் 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால், காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று கோரி, அம்மாநில பத்திரிகையாளர்கள் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதைத் தொடர்்நது, ஸ்ரீநகர் உள்பட சில நகரங்களில் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் வளர்ச்சித் திட்டங்களை வேகமாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து ஒரு குழுவை அனுப்பியுள்ளது. அந்த குழுவினருடன் ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளும் சேர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, பல துறைகளின் உயர் அதிகாரிகளுடன் காஷ்மீர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி ஆலோசித்தார். இது பற்றி ஒரு அதிகாரி கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்து 50 ஆயிரம் இளைஞர்களை துணை ராணுவப் படைக்கு தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், பால் பண்ணைகள் ஆகியவை அமைத்து கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதிகமான வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் போது இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும் என மத்திய அரசு உறுதியாக நம்புகிறது’’ என்று தெரிவித்தார்.

காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு; அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு

You'r reading ஜம்மு காஷ்மீர், லடாக்கில் 50 ஆயிரம் பேருக்கு வேலை மத்திய அரசு திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை