கொரோனா நிபந்தனைகளில் 4ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா உள்பட 6 மாநிலங்களில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா ஊரடங்கு சட்டத்தில் 4ம் கட்ட தளர்வுகளின்படி செப்டம்பர் 21 (நாளை) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நிபந்தனைகளுடன் வகுப்புகளை தொடங்க மத்திய அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. அனைத்து மாநிலங்களும் பள்ளிகளை திறக்க கட்டாயமில்லை என்றும், இதுகுறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் அனுமதிக் கடிதத்துடன் வரும் மாணவர்கள் மட்டுமே வகுப்பில் அனுமதிக்கபடுவார்கள். இரண்டு வாரங்களுக்கு வகுப்புகளை நடத்தவும், அதன்பின்னர் தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து அப்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை திறப்பு குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்துகொள்ளலாம். மாணவர்களுக்கு ஆஜர் கட்டாயமில்லை.
9 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் அதிகபட்சமாக 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். காலை, மதியம் என 2 ஷிப்டுகளாக வகுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதன்படி நாளை முதல் கர்நாடகா, ஆந்திரா, அசாம், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மற்ற மாநிலங்களில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.